உலகின் மிக நீளமான பாதையில் விமானம் இயக்கிய பெண் விமானிகள்.. விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

0 2220

வட துருவத்தின் வழியாக உலகின் மிக நீளமான விமானப் பாதையை ஏர் இந்தியாவின் இளம் பெண் கேப்டன் சோயா அகர்வால் தலைமையிலான பெண் விமானிகள் கடந்து வரலாற்றுச் சாதனைப் படைத்து உள்ளனர்.

உலகின் நீளமான விமானப் பாதைகளுள் ஒன்று சான் பிராசிஸ்கோ முதல் பெங்களூரு இடையிலான பாதை. சுமார் 16,000 கிலோ மீட்டர் நீளமுடைய சவால் நிறைந்த இந்த பாதையை பனிபடர்ந்த வட துருவத்தின் வழியாகவே கடக்க வேண்டும். மேலும் சான்பிராசிஸ்கோவில் இருந்து புறப்படும் இந்த நீண்ட விமானப் பயணம் இடையே எங்கும் நிற்காமல் பெங்களூருவுக்கு வந்தே தரையிறங்கும்.

இத்தகைய சவால் நிறைந்த உலகின் நீளமான தூரத்தை கடப்பதற்கு அதிகப்படியான திறமையும், அனுபவமும் அதோடு தொழில்நுட்பத்தை நன்றாக பயன்படுத்தக் கூடிய விமானிகளால் மட்டுமே முடியும். பல காலமாக இது போன்ற நீளமான விமானப் பாதையில் விமானம் இயக்குவதற்கு ஆண் விமானிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்தனர். ஆனால் வரலாற்றில் முதன் முறையாக பெண் விமானிகள் கூட்டாக இணைந்து வடதுருவத்தின் மேலான இந்த நீளமான பாதையில் பறக்க அனுமதி அளிக்கப்பட்டது. அதுவும் இந்த விமானப் பயணத்தை தலைமையேற்று வழிநடத்தும் பொறுப்பு சோயா அகர்வால் என்ற பெண் கேப்டனிடம் ஒப்படைக்கப்பட்டது.

”அடுப்பூதும் பெண்களுக்கு கல்வி எதற்கு?” என்ற காலமெல்லாம் இந்த கணினியுக காலத்தில் எங்கேயோ கரைகடந்து காணாமல் போய்விட்டது. அதன்படி இன்று கோடிகணக்கான தூரத்தில் கடல் மேல் பறந்து கண்டங்கள் கடந்து தற்போது வரலாற்றுச் சாதனை படைத்து இந்தியாவிற்கு பெருமை சேர்ந்துள்ளனர் இந்த பெண் விமானிகள்.

கடந்த 9ம் தேதி இரவு 8.30 மணிக்கு சான்பிராஸ்கோவில் இருந்து ஏர் இந்தியா விமானம் நான்கு பெண் விமானிகள் மற்றும் 238 பயணிகளுடன் புறப்பட்டது. பின்னர் வடதுருவத்தைக் கடந்து அட்லாண்டிக் கடல் வழியாக சுமார் 17 மணி நேரம் தொடர்ச்சியாகப் பயணித்த விமானத்தை இன்று அதிகாலை 3.20 பெங்களூர் கெம்பகவுடா சர்வதேச விமான நிலையத்தில் வெற்றிகரமாக தரை இறக்கியுள்ளனர் சோயா அகர்வால் தலைமையிலான இந்த சாதனை பெண் விமானிகள்..

238 பயணிகளுடன் பாதுகாப்பாக பெங்களூரு வந்து இறங்கி வரலாற்று சாதனைப் படைத்துள்ள கேப்டன் சோயா உள்ளிட்ட நான்கு பெண் விமானிகளுக்கு கெம்பகவுடா சர்வதேச விமான நிலைத்தில் ரோஜாப் பூ கொடுத்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இது குறித்து ஏர் இந்தியாவின் பெண் கேப்டனான சோயா அகர்வால் கூறுகையில், "உலகில் பெரும்பாலான மக்கள் தங்கள் வாழ்நாளில் வட துருவத்தையோ அல்லது அதன் வரைபடத்தையோ கூட பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் நாங்கள் அதன் மேல் வெற்றிகரமாக பறந்துள்ளோம். சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் மற்றும் ஏர் இந்தியா நிறுவனம் என்மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். போயிங் -777 விமானத்தில் கேப்டனாக கட்டளையிட்டது ஒரு பொன்னான வாய்ப்பு. அதுவும் வட துருவத்தின் மீது உலகின் மிக நீண்ட விமானப் பாதையில் பறந்தது மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும்” என்று கூறியுள்ளார்.

மேலும், ”என்னுடன் தன்மாய் பாபகரி, ஆகான்ஷா சோனவனே மற்றும் சிவானி மன்ஹாஸ் ஆகியோர் அடங்கிய அனுபவம் வாய்ந்த பெண் விமானிகள் இருப்பது மிகவும் பெருமையளிக்கிறது. பெண் விமானிகள் ஒரு அணியாக சேர்ந்து வட துருவத்தின் மீது பறந்து வரலாற்றை உருவாக்குவது இதுவே முதல் முறையாகும். உண்மையில் எந்தவொரு தொழில்முறை விமானிக்கும் இது பெரும் சாதனை கனவாகும்” என்று கூறியுள்ளார்.

சமூகத்தில் இன்று பெண்கள் மீது எத்தகைய அழுத்தம் இருந்தாலும் அதனை துணிவுடன் எதிர்கொண்டு சாதனைப் படைக்க வேண்டும். இன்றைய நாகரீக உலகத்தில் பெண்களால் சாத்தியமற்றது என்ற சொல்லக்கூடிய சாதனைகள் எதுவுமே இல்லை. அதற்கு துணிவும், மன உறுதியுமே போதுமானது. அதற்கு சிறந்த உதாரணமாக கண்டங்கள் தாண்டி வரலாற்று சாதனையுடன் பெங்களூரு தரையிறங்கி இருக்கின்றனர் கேப்டன் சோயா அகர்வால் தலைமையிலான இந்த ஆகாச சூரிகள்..

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments