புதிர் நிறைந்த பெர்முடா முக்கோணம் ... மாயமாகும் கப்பல் விமானங்கள்... காரணம் கண்டுபிடிக்கப்பட்டதா?

புதிர் நிறைந்த பெர்முடா முக்கோணம் தொடர்பான சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா...
வாழ்க்கையை சுவாரசியம் ஆக்குவதே அடுத்த நொடி ஒளிர்ந்திருக்கும் அதிசயங்கள் தான். அப்படி பல அதிசயங்களும் மர்மங்களும் நம்மை சூழ்ந்து இருக்கின்றன. அந்த வகையில் இந்த புவியில் மர்மங்கள் நிறைந்த பல இடங்கள் உண்டு. உலகில் ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் இந்த மர்மங்களால் மனிதர்கள் ஈர்க்கப்படுவது இயல்பு தான். அப்படி மர்மங்கள் புதைந்திருக்கும் இடங்களில் மிகவும் பிரபலமான இடம் தான் பெர்முடா முக்கோணம். இன்று வரை பெர்முடா முக்கோணம் பற்றிய புதிருக்கு விடை தெரியாமல் பலரும் ஆச்சரியத்தில் உள்ளனர்.
வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலின் மேற்கு பகுதியில் உள்ளது இந்த பெர்முடா முக்கோணம். இது புளோரிடா(Florida), புவர்டோ ரிக்கோ ( puerto rico ) மற்றும் பெர்முடா(Bermuda) தீவுக்கு இடையில் அமைந்துள்ளது. இந்த மூன்று இடங்களையும் இணைத்து பார்த்தால் ஒரு முக்கோண வடிவம் தென்படும். இது தான் பெர்முடா முக்கோணம் என்று கூறப்படுகிறது. 500,000 சதுர மைல்கள் பரவியுள்ள இந்த பெர்முடா முக்கோணத்தில் அப்படியென்ன ஆச்சர்யமும் மர்மமும் உள்ளது?
பெர்முடா முக்கோணம் வழியே சென்ற பல விமானங்களும், கப்பல்களும் மாயமாகி உள்ளன. அதற்கான முழுமையான விடை இன்று வரை தெரியவில்லை. இந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி , 20 பேரை ஏற்றி சென்ற படகு ஒன்று காணாமல் போனது. அமெரிக்க கடலோர காவல் படையினர் கிட்டத்தட்ட 17,000 சதுர மைல்கள் தேடியும் அந்த படகு இன்னும் கிடைக்கவில்லை.
ஆனால் இது இன்று நேற்று நடைபெறுவது அல்ல. பல நூறு வருடங்களாக இங்கு விமானங்களும், கப்பல்களும் மாயமாகி வருவது வழக்கமாக நடைபெறுவது தான். இதுவரை இங்கு 75 விமானங்களும், 100 க்கும் மேற்பட்ட கப்பல்களும், கிட்டத்தட்ட 1000 மனிதர்களும் இங்க மாயமாகி உள்ளனர் என்று கூறப்படுகிறது. ஆனால் இதுவும் இறுதியான தகவல் அல்ல. 15 ஆம் நூற்றாண்டிலிருந்து இந்த மர்மம் தொடர்ந்து கொண்டே தான் வருகிறது.
ஆனால் 20 நூற்றாண்டில் தான் இங்கு நடந்த ஒரு சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. கடந்த1918 ஆம் ஆண்டு 300 பேரை ஏற்றிச்சென்ற அமெரிக்க கப்பல் ஒன்று மாயமானது. பின்னர்,1945ல், 5 அமெரிக்க சிறிய போர்விமானங்களும், ஒரு மீட்பு விமானமும் காணாமல் போனது. இதனை தொடர்ந்து பெர்முடா முக்கோணத்தில் பல சம்பவங்கள் நடந்துகொண்டுதான் இருக்கிறது.
இதுக்குறித்து சமீபத்தில், விஞ்ஞானிகள் புதிதாக ஒரு கருத்தை வெளியிட்டுள்ளனர். செயற்கைக்கோள் படங்களை ஆதாரமாக வைத்து,பெர்முடா முக்கோணம் மேல் உள்ள மேகங்களால் தான் இந்த சம்பவங்கள் நடைபெறுவதாக அவர்கள் கூறியுள்ளனர்.
ஆறுகோண வடிவம் உள்ள இந்த மேகங்கள் வெடிப்பதால் சுமார் 170 மைல் வேகத்தில் காற்றடித்து, 45 அடி அளவிற்கு கடல் அலைகள் எழும்பக்கூடும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதனை தாக்குப்புடிக்க முடியாமல் விமானங்களும், கப்பல்களும் உடைந்து கடலடியில் போகக்கூடும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பெர்முடா முக்கோணத்தை போன்று மேலும் 11 இடங்கள் உள்ளதாக பிரிட்டன் ஆய்வாளர் இவான் சாண்டர்சன்(Ivan Sanderson ) கண்டறிந்துள்ளார். இவை "Vile vortex " என்று அழைக்கப்படும். மர்மமான நிகழ்வுகள் நடக்கும் இடங்களையே அவர் vile vortex என்று அழைத்தார். ஈகுவேடர்(Equator ) பகுதியின் மேல் 6 vile vortex பகுதிகளும், ஈகுவேடர்(Equator ) பகுதியின் கீழ் 6 பகுதிகளும் உள்ளன எனவும் அவர் கூறியுள்ளார் .
பெர்முடா முக்கோணம் எல்லைக்குள் வரும் விமானங்கள் மற்றும் கப்பல்களின் சிக்னல்கள் அங்கு துண்டிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் அந்த விமானங்கள் மற்றும் கப்பல்கள் தொடர்புகளை இழப்பதாகவும் கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து பலரும் பல கருத்துக்களை கூறிவருகின்றனர். கடல் அரக்கர்கள் தான் இதற்கு காரணம் என்று சிலர் கூறுவர் , மேலும் சிலர் இது வேற்றுகிரகவாசிகள் செயல் என்று கூறுவர்.
பெர்முடா முக்கோணம் பற்றி பல திரைப்படங்களும், கருத்துக்களும் நிலவி வருகிறது. இவையனைத்தும் வியூகங்களே தவிர அதிகாரபூர்வமான கருத்துக்கள் எதுவும் இல்லை.
Comments