வீட்டிலேயே பிரசவம்..! அலட்சியத்தின் உச்சக்கட்டம்... கர்ப்பிணிக்கு நேர்ந்த கொடூரம்

0 64077
வீட்டிலேயே பிரசவம்..! அலட்சியத்தின் உச்சக்கட்டம்... கர்ப்பிணிக்கு நேர்ந்த கொடூரம்

பெரம்பலூரில் கணவர் குடும்பத்தினர் பேச்சைக் கேட்டு இயற்கை முறைப்படி பிரசவம் பார்த்துக் கொள்வதாக கூறி, 10 மாதமாக மருத்துவமனைக்கு செல்லாமலும், எந்த ஒரு பரிசோதனையும் செய்து கொள்ளாமலும் இருந்த நிறைமாத கர்ப்பிணி பெண் உயிரிழந்தார். பி.எஸ்.சி. நர்சிங் படித்த பெண்ணுக்கு கணவராலும் அவரது குடும்பத்தினரின் அலட்சியத்தாலும் நிகழ்ந்த விபரீதம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு....

பெரம்பலூர் மாவட்டம், பூலாம்பட்டியை சேர்ந்த விஜயவர்மன் - அழகம்மாள் தம்பதிக்கு திருமணமாகி ஓராண்டு ஆன நிலையில், கடந்த ஏப்ரலில் அழகம்மாள் முதல் குழந்தை கருவுற்றிருந்தார்.

விஜயவர்மனின் அண்ணன் விக்கிரமராஜா அக்குபஞ்சர் மருத்துவம் பார்த்து வந்ததால், வீட்டிலேயே இயற்கை முறைப்படி பிரசவம் பார்த்துக் கொள்ளலாம் என கணவன் குடும்பத்தினர் கூறவே, பி.எஸ்.சி. நர்சிங் படித்த அழகம்மாளும் அதனை நம்பி இருந்துள்ளார். இதனை அறிந்த சம்பந்தப்பட்ட சுகாதாரத்துறை அலுவலர்கள், ஜூன் மதம் வீட்டுக்கு சென்று மருத்துவ பரிசோதனைக்கு வருமாறு வற்புறுத்தியுள்ளனர்.

அதற்கு மறுத்துவிட்ட கணவன் விஜயவர்மன், தன்னுடைய மனைவிக்கு வீட்டிலேயே இயற்கை முறையில் பிரசவம் பார்த்துக் கொள்வதாகவும், மருத்துவமனைக்கு சென்று மருந்துகள் எடுத்துக் கொள்ள தங்களுக்கு விருப்பமில்லை என்றும், மனைவிக்கோ, குழந்தைக்கோ ஏதேனும் பின்விளைவுகள் ஏற்பட்டாலோ, அசம்பாவிதங்கள் நிகழ்ந்தாலோ அதற்கு மருத்துவர்களோ, செவிலியர்களோ பொறுப்பில்லை என ஆகஸ்ட் மாதம் பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.

தொடர்ந்து, நவம்பர் மாதமும், பரிசோதனைக்கு அழைத்த சுகாதார அலுவலர்கள், இது குறித்து போலீசில் புகாரும் அளித்துள்ளனர். இந்த நிலையில், நேற்று நள்ளிரவில் அழகம்மாளுக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டு, குழந்தை பாதி பிரசவித்த நிலையில் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, ஆம்புலன்ஸ் மூலம் அழகம்மாளை பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

கணவர் குடும்பத்தினர். அங்கு அழகம்மாள் வயிற்றில் இருந்து குழந்தை அழுகிய நிலையில் சடலமாக வெளியே எடுக்கப்பட்டது. ரத்த போக்கு நிற்காமல் இருந்ததால், மேல் சிகிச்சைக்கு திருச்சி அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட அழகம்மாள், செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து, அரும்பாவூர் போலீசார் கணவர் விஜயவர்மன் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பேறு கால இறப்பை தவிர்க்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் சூழலில், பாரம்பரியத்தை முன்னிறுத்துவதாக கூறி இது போன்று அலட்சிய செயல்களில் ஈடுபட்டால் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு சான்றாக அமைந்திருக்கிறது இந்த சம்பவம். தற்போதைய வாழ்க்கை முறைக்கும், உணவு பழக்க வழக்கத்திற்கும் வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது என்பது சாத்தியமில்லை. முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கையும் அவர்கள் மேற்கொண்ட உணவு பழக்கமும் வேறு.

இதனை புரிந்து கொள்ளாமல் யூடியூப்பில் வீடியோ பார்த்து பிரசவம் பார்ப்பது, பரிசோதனை செய்து கொள்ளாமல் இருப்பது, முறையான மருத்துவ ஆலோசனையை பெறாமல் இருப்பது அடி முட்டாள் தனம் என்கின்றனர் மருத்துவர்கள்...அதேசமயம், கர்ப்பிணியின் உயிருக்கு ஊறு விளைவிளைக்கும் செயல்களை செய்வது தண்டனைக்குரிய குற்றம் என்றும் எனவும் எச்சரிக்கின்றனர் சுகாதாரத்துறையினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments