ஜீன்ஸ் அணிந்தால் விவகாரத்து செய்து விடுவதாக மிரட்டும் கணவர்... காவல்நிலையத்தில் புகாரளித்த மனைவி!

0 1703

குஜராத்தின் அகமதாபாத்தில் 37 வயதான பெண் ஒருவர் தனது கணவர், மாமியார் மற்றும் மாமியார் ஆகியோர் தன்னை  உடல் மற்றும் மனரீதியாக கொடுமை செய்து வருவதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள வேஜல்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ரஹீம். இவர் கடந்த 2017ம் ஆண்டு 37 வயதான ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். முதல் இரண்டு திருமணங்கள் விவகாரத்தில் முடிந்த நிலையில் ரஹீமுக்கு இது மூன்றாவது திருமணம் ஆகும். அதேபோல் அந்த பெண்ணுக்கும் இது இரண்டாவது திருமணம் ஆகும்.

திருமணத்திற்கு முன்பே தனது கணவரிடம் அந்த பெண், திருமணத்திற்கு பிறகு தனிக்குடித்தனம் செல்ல வேண்டும் எனவும், தான் செய்து வரும் வேலையை தொடர அனுமதிக்க வேண்டும் எனவும் இரண்டு நிபந்தனைகளை விதித்துள்ளார். தனது மனைவியின் நிபந்தனைகளை ஏற்பதாக கூறியப்படியே, திருமணம் முடிந்ததும் ஃபதேவாடி பகுதியில் மனைவியின் தந்தை வாங்கி கொடுத்த ஒரு பிளாட்டுக்கு குடிபெயர்ந்துள்ளனர். முதல் இரண்டு ஆண்டுகள் இருவரும் அங்கு மகிழ்ச்சியாகவே வாழ்ந்து வந்தனர்.

அதன் பின்னர், கணவர் ரஹீம் தனது பெற்றோருடன் தங்கும்படி மனைவிக்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்கினார். மேலும் தன் மனைவி ஜீன்ஸ் அணிவதற்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் இதனைத் தொடர்ந்தால், அவரை விவகாரத்து செய்து விட்டு நான்காவது முறையாக வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகவும் மிரட்டியுள்ளார்.

இதனால் கலக்கமடைந்த அப்பெண் தற்போது அப்பகுதி காவல் நிலையத்தில் ஒரு பரபரப்பு புகார் ஒன்றினை அளித்துள்ளார். அந்த புகாரில், ”தன் கணவர் மற்றும் அவரது பெற்றோர் தன்னை உடல் மற்றும் மனரீதியாக துன்புறுத்தி வருகின்றனர். ஜீன்ஸ் அணிய எதிர்ப்பு தெரிவிப்பதோடு, ஜீன்ஸ் அணியும் பெண்கள் அனைவரையும் கொச்சைப்படுத்தி பேசி வருகின்றனர். அதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளித்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த வேஜல்பூர் காவல்நிலைய போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments