பிரச்சார பயணத்தின்போது மு.க.ஸ்டாலின் நேருக்கு நேர் வந்தால் விவாதிக்க தயார் - முதலமைச்சர்

தேர்தல் சுற்றுப்பயணத்தின் போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேருக்கு நேர் வந்தால் விவாதிக்க தயார் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் உரையாற்றிய இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, பெரிதும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் தாம் இருப்பதாகவும், இனி தன் இறுதி நாள் வரை அதிமுகவே தன் மூச்சாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார். முதலமைச்சர் வேட்பாளராக தம்மை தேர்வு செய்ததற்கும் நன்றி தெரிவித்து கொண்டார். குறிப்பாக ஓ.பன்னீர்செல்வத்திற்கு கோடான கோடி நன்றிகள் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
ஆட்சி எப்போதும் வீழும் என்று காத்துகொண்டிருந்தவர்களுக்கு மத்தியில் அடுத்தும் அதிமுக ஆட்சியே என்று சாதித்து காட்ட அவர் சூளுரைத்தார். 4 ஆண்டுகளில் கற்றதை வைத்துக்கொண்டு, வரும் நாட்களில் தான் சிறப்பாக பணியாற்றுவேன் என்றும் அவர் உறுதியளித்தார்.
நாடாளுமன்றத்தை யார் ஆள வேண்டும் சட்டமன்றத்தை யார் ஆள வேண்டும் என மக்கள் பிரித்து பார்த்து வாக்களிப்பதாக அவர் குறிப்பிட்டார். தேர்தல் சுற்றுப் பயணத்தின் போது ஸ்டாலின் நேருக்கு நேர் வந்தால் விவாதிக்கலாம் என்றார். பெண்குலத்தை இழிவுபடுத்தி பேசிய உதயநிதி பிஞ்சிலே பழுத்துவிட்டதாகவும் அவர் விமர்சித்தார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, தங்கள் இயக்கத்தில் வேஷ்டி கட்டும் ஆண்கள் உண்டு, கோஷ்டி சேர்க்கும் ஆட்கள் இல்லை என்றார். கொரோனாவை விட தீவிர வைரசான திமுகவை ஒழித்துக் கட்டும் ஆண்டுதான் 2021 என அவர் கூறினார்.
Comments