பேருந்து சக்கரத்தில் சிக்கி இழுத்து செல்லப்பட்ட பெண்..! பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்
திருப்பூரில் ஸ்கூட்டர் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் ஸ்கூட்டரில் பயணித்த பெண் ஒருவர் பின்பக்க டயரில் சிக்கி இழுத்து செல்லப்படும் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவரான மாசித், திருப்பூர் கோவில்வழி பகுதியில் குடும்பத்துடன் தங்கியிருந்து பனியன் கம்பெனியில் பணியாற்றி வருகிறார்.
அவருடைய மனைவி சுருதி, தனது 1 வயது மகளான ஆதிரா, தாயார் சந்திரிகா ஆகியோருடன் ஸ்கூட்டரில் திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ஜவுளி கடையில் துணி எடுத்து விட்டு நேற்று மதியம் 3 மணிக்கு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
ஸ்கூட்டரை சுருதி ஓட்ட சந்திரிகாவும் சிறுமி ஆதிராவும் பின்னால் அமர்ந்திருந்தனர். திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையம் அருகே ஸ்கூட்டர் வந்தபோது, பின்னால் வந்த அரசு பேருந்து திடீரென ஸ்கூட்டரின் பக்கவாட்டில் மோதியது.
பேருந்து மோதியதும் ஸ்கூட்டர் நிலைதடுமாறி சாயவே, அதிலிருந்த சுருதி, சந்திரிகா, ஆதிராவும் கீழே விழுந்தனர்.
சுருதி சக்கரத்திற்கு அப்பால் விழுந்த நிலையில், தாயார் சந்திரிகாவும், சிறுமி ஆதிராவும் பேருந்து பின் டயரின் அருகே விழுந்தனர். டயரில் சிக்கிய சந்திரிகாவை தேய்த்தபடி இழுத்து சென்றபோது சிறுமி ஆதிரா உந்தி தள்ளப்பட்டு டயரில் சிக்காமல் தப்பினார்.
இருப்பினும் சந்திரிகாவின் இடுப்பு பகுதியில் பேருந்து சக்கரம் ஏறி இறங்கியதில் அவர் பலத்த காயமடைந்தார்.
சந்திரிகாவை அங்கிருந்தோர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அங்கு அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்து குறித்து திருப்பூர் தெற்கு காவல்நிலைய போலீசார் அரசு பேருந்து ஓட்டுநருக்கு எதிராக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதனிடையே, விபத்துக்கு காரணமான அரசு பேருந்து ஓட்டுநரான தாராபுரம் புனிவாடி அன்னைபாளையத்தை சேர்ந்த (Poonivadi) குருந்தாரா தாஸ் (Kurunthara Dass) என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Comments