நைசாக நீர் நிலையை ஆட்டையை போட்ட தனியார் பள்ளி... புத்தி புகட்டிய அரசு அதிகாரிகள்!

கோவை அருகே நீர் நிலை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த தனியார் பள்ளியின் சுற்றுச்சுவரை அதிகாரிகள் இடித்து தள்ளினர்.
கோவையை அடுத்த பன்னிமடையை அடுத்துள்ள நஞ்சுண்டாபுரம் ஊராட்சிக்குட்பட்ட வரப்பாளையத்தில் பி.ஜி.வி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி நிர்வாகத்தினர் அரசுக்கு சொந்தமான சுமார் 3 ஏக்கர் பரப்பளவு கொண்ட நீர் நிலை புறம்போக்கு நிலத்தை சுற்றி சுற்றுச்சுவர் எழுப்பியுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர்.
அரசு அதிகாரிகள் பள்ளி வளாகத்துக்குள் புகுந்து ஆய்வு மேற்கொண்டனர் . இதில், பி.ஜி.வி.பள்ளி நிர்வாகத்தினர் அரசுக்கு சொந்தமான நீர் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, நீர் நிலை புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமிக்க கூடாது என்று அறிவுறுத்திய அதிகாரிகள் உடனடியாக சுற்றுச்சுவரை அகற்ற பள்ளி நிர்வாகத்துக்கு நோட்டீஸ் வழங்கினர்.
ஆனால் , பள்ளி நிர்வாகம் சுற்றுச்சுவரை இடிக்காமல் அதிகாரிகள் உத்தரவை அலட்சியப்படுத்தியது. தொடர்ந்து, கோவை வடக்கு வட்டாட்சியர் மற்றும் வட்ட நிர்வாக நடுவர் உத்தரவின் பேரில் நேற்று அங்கு சென்ற வடக்கு வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ்குமார், வருவாய் ஆய்வாளர் ஆகாஷ்குமார், கிராம நிர்வாக அலுவலர் ஜோதி பிரகாஷ் ஆகியோர் புல்டோசர் கொண்டு பள்ளி நிர்வாகத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட 3 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த சுற்றுச்சுவரை இடித்து தள்ளினர்.
அரசு அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கையை மக்கள் வெகுவாக பாராட்டினர்.
Comments