விலையில்லா ஆட்டுக்கு விலை... தலா ரூ. 2,000 வசூலித்த ஊராட்சி செயலர்!

0 5709

பொன்னமராவதி அருகே தமிழக அரசின் விலையில்லா ஆடு வழங்கும் திட்டத்திற்கு பயனாளிகளிடம் தலா ரூ. 2,000 பெறும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட எம்.உசிலம்பட்டியில் தமிழகஅரசின் விலையில்லா ஆடு பெற 139 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். 

இவர்களுக்கு கொன்னையூரில் உள்ள சந்தையில் வைத்து ஆடுகள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. , முன்னதாக, எம். உசிலம்பட்டியில் கால்நடை துறை கூட்டம் நடத்தி தமிழக அரசு ஒவ்வொரு நபருக்கும் நான்கு ஆடுகள் வழங்க 10,000 ரூபாய் ஒதுக்கியுள்ளது.

மூன்று ஆடுகள் ஒரு கிடா என நான்கு ஆடுகள் வாங்க அரசு ஒதுக்கிய ரூ. 10, 000  போதுமானதாக இருக்காது . அதனால், பயனாளர்கள் ரூ 2, 000 கொடுத்துவிட்டு ஆடுகளை பெற வேண்டும் என்று ஏடி மற்றும் கால்நடை மருத்துவர் ஊராட்சியில் பணிபுரியும் அலுவலர்கள் கூறியதாக கூறப்படுகின்றது,

இதையடுத்து, பயனாளிகளிடம் ஊராட்சி செயலர் சின்னகாளை மற்றும் பணித்தள பொறுப்பாளர் முருகேசன் உள்ளிட்ட இருவரும் தலா 2, 000 பெற்றுக்கொண்டு ஆடுகளை வழங்கியுள்ளனர்.

பொதுமக்கள் ஆடுகள் சின்னதாக உள்ளன. அதனால், தங்களுக்கு வேண்டாம் என்று ஆடுகளை வாங்க மறுத்துள்ளனர்.  ஆடுகள் வாங்கினால்தான் மற்ற எல்லா நலத்திட்டங்களும் உங்களுக்கு கிடைக்கும் என்றும் கூறி ஆடுகளை மக்கள் தலையில் கட்டியுள்ளனர்.

வேறு வழியின்றி பயனாளர்கள் ஆடுகளை வாங்கி சென்றுள்ளனர். அப்படியும் தேர்வு செய்யப்பட்ட 139 பயனாளிகளில் 70 பேருக்கு மட்டுமே ஆடுகள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

விலையில்லா ஆடுகளுக்காக  பயனாளிகளிடம் பணம் பெறும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ம். உசிலம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பழனிச்சாமியிடம் விளக்கம் கேட்ட போது, பத்தாயிரத்துக்குள் ஆடுகள் வாங்க முடியாததால், பயனாளர்களிடத்தில் ரூ 2,000 கூடுதலாக வாங்கியுள்ளனர்.

இது தொடர்பாக எம். உசிலம்பட்டியில் நடந்த கூட்டத்தில் நான் பங்கேற்கவில்லை . பொதுமக்களை பணம் கொண்டுவர  வற்புறுத்த வேண்டாம் என்றே நான் வலியுறுத்தினேன்.

பக்கத்து ஊராட்சிகளிலும் பயனாளிகளிடம் ரூ. 2, 000 வாங்கிய பின்னரே பொதுமக்களுக்கு தமிழக அரசின் விலையில்லா ஆடுகள் வழங்கப்படுகின்றன.

இதுகுறித்து , சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளேன்'' என்றார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments