பாசமாக பாசிமணி மாலை.. 5 மொழி பேசும் அதிசயம்..! அனுபவமே சிறந்த ஆசான்

0 28245
பாசமாக பாசிமணி மாலை.. 5 மொழி பேசும் அதிசயம்..! அனுபவமே சிறந்த ஆசான்

மகாபலிபுரத்தில் பாசிமணி மாலை விற்கும் பெண் ஒருவர் பிரெஞ்சு, ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய 5 மொழிகளை கற்றுக் கொண்டு சரளமாகப் பேசிவருகிறார். பள்ளிப் படிப்பில்லாமல் அனுபவமே ஆசான் என்பதை உலகிற்கு உணர்த்தும் உழைப்பாளிப் பெண் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

பள்ளிக்கல்வியில் மூன்று மொழிகளைக் கற்பதற்கு பலருக்கு கசக்கும் நிலையில் பள்ளிப்படிப்பை தொடாத பாசிமணி விற்கும் ஏழைப் பெண் ஒருவர் தனது அனுபவ அறிவால் 5 மொழிகளை சரளமாக பேசக் கற்றுக் கொண்டு அசத்தி வருகின்றார்.

பல்லவ மன்னனின் கடற்கரை நகரமான மகாபலிபுரத்தில் பாசிமணி மாலை விற்கும் கடை நடத்திவரும் பூஞ்சேரியைச் சேர்ந்த வள்ளியம்மாள் தான் 5 மொழி பேசி அசத்தும் அந்த உழைப்பாளி..!

தனது கடைக்கு வரும் வெளிநாட்டுக்காரர்கள் மூலம் ஆங்கிலம் கற்றுக் கொண்டதாகத் தெரிவிக்கும் வள்ளியம்மாளின் பேச்சில் ஆங்கில வார்த்தைகள் அனாசயமாக வந்து விழுகிறது.

அன்னிய மொழி என்று ஆங்கிலத்தை ஒதுக்காமல் அரவணைத்துக் கொண்ட வள்ளியம்மாள், பிரெஞ்சு மொழியும் தெரிந்து வைத்திருக்கிறார்

அன்னிய மொழி மட்டுமல்ல அண்டை மாநிலமா ஆந்திராவில் பேசும் தெலுங்கையும், கற்றுக் கொள்ளவே கூடாது என்று கருப்புச் சாயம் பூசப்படும் இந்தியையும் அசத்தலாகப் பேசுகின்றார்.

தனது தொழிலுக்கு உதவும் என்கிற அடிப்படையில் ஆர்வமாய் ஒவ்வொரு மொழிகளையும் கற்றுக் கொண்டதாக தெரிவிக்கிறார் மராட்டியத்தை தாய்மொழியாகக் கொண்ட தமிழ் பேசும் வள்ளியம்மாள்..!

பல மொழிகளும் தெரிந்து கொண்டதால் பாசிமணி மாலை விற்கும் தொழிலுக்குத் தேவையான பலவண்ண பாசிமணிகளையும், கற்களையும் கொள்முதல் செய்வதற்காக ஆண் துணையின்றி தைரியமாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் ரயிலில் சென்று வருவதாக நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்

தாய்மொழி என்பது அனைவருக்கும் சுவாசம் போன்றது என்பதில் மாற்றுக் கருத்தில்லை, அதே நேரத்தில் மாநிலம் கடந்த மக்களை சந்தித்து தொழிலை வளர்த்துக் கொள்ள வேண்டுமானால் மற்ற மொழிகளை கற்றுக் கொள்வதில் தவறில்லையே..!

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments