' வெயிட்... தை பிறந்த பிறகு மீண்டும் பேசுவேன்!'- காஞ்சியில் கோயில் வழிபாட்டில் பங்கேற்ற எஸ்.ஏ. சந்திரசேகர் சொல்கிறார்

0 51502

இப்போதைக்கு நான் பேச எதுவுமில்லை. தை மாதம் பிறந்த பிறகே பேசுவேன் என்று நடிகர் விஜயின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ . சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

இயக்குநராகவும் பின்னர் நடிகராகவும் வலம் வந்த எஸ் ஏ சந்திர சேகருக்கு தன் மகன் விஜயை மிகப்பெரிய ஹீரோவாக்க நினைத்தார். எஸ்.ஏ. சந்திரசேகர் எடுத்த பல முயற்சிகள் காரணமாக பல தோல்விகளுக்குப் பிறகு நடிகர் விஜய் வெற்றிக்கதாநாயகனாக மாறினார். நடிகர் விஜய்யின் வெற்றியின் பின்னால் எஸ்.ஏ சந்திரசேகர் இருந்தார் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. பின்னர், விஜய்க்கு ரசிகர் மன்றத்தை தொடங்கி அதை மக்கள் இயக்கமாக மாற்றியது அவரை அரசியல் களத்துக்கு இழுத்து வர எஸ்.ஏ சந்திரசேகர் பாதை அமைத்தார்.

இதற்காக, அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவுச் செய்ததாக சொல்லப்பட்டது. எந்த நேரத்தில் கட்சி ஆரம்பித்தாரோ, அப்போது முதல் எஸ். ஏ. சந்திரசேகரன் குடும்பத்தில் புயல் வீசியது. தனக்கும் கட்சிக்கும் சம்பந்தமில்லை என்று விஜய் கூறி விட, கட்சி பொருளாளர் பொறுப்பில் இருந்த விஜய்யின் தாயார் ஷோபா விலகிக் கொண்டார். தொடர்ந்து கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டிருந்த பத்மநாபன் என்கிற திருச்சி ஆர்.கே.ராஜா ராஜினாமா செய்தார். மன்றத்தில்தன் தந்தைக்கு விசுவாசமாக இருக்கும் நிர்வாகிகளை நீக்கி புதிய நிர்வாகிகளை நியமித்தார் விஜய். இதையடுத்து, எஸ்.ஏ. சந்திரசேகரின் அரசியல் கனவு பணால் ஆனது. இத்தகைய, குழப்பத்துக்கு பிறகு எஸ்.ஏ.சந்திரசேகர் அமைதியாகி விட்டார்.

இந்த நிலையில்,காஞ்சிபுரம் அருகே சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ராஜ் குபேர சித்தர் பீடத்துக்கு நேற்று எஸ்.ஏ சந்திரசேகர் வருகை தந்தார். இந்த கோயிலில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகிறது. இந்த ஆராதனையில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம். நேற்று நடைபெற்ற அபிஷேக ஆராதனையில் எஸ். ஏ சந்திரசேகருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், தேவ ராஜ குபேர சித்தர் சுவாமியை சந்தித்து எஸ்.ஏ சந்திரசேகர் ஆசி பெற்றார். கோயில் நிர்வாகம் சார்பில் சாமிக்காக செய்யப்பட்ட தங்கக் கவசங்கள் எஸ் ஏ சந்திரசேகர் தலைமையில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு சாத்தப்பட்டது. இந்த ஊர்வலத்தில் எஸ்.ஏ சந்திரசேகர் பய பக்தியுடன் பங்கேற்றார்.

சுவாமி தரிசனம் செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய எஸ் ஏ சந்திரசேகர் , தற்போது பேசுவதற்கு எதுவுமில்லை. தை மாதம் பிறந்த பிறகே எது குறித்தும் பேசுவேன் என்றும் தற்போது சாமி தரிசனம் செய்யவே காஞ்சிபுரத்துக்கு வந்துள்ளதாக கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments