செம்மர கடத்தல் விவகாரம்: விவேக் ஜெயராமனின் மாமனார் 'கட்டை' பாஸ்கர் கைது!

0 3529
கைதான 'கட்டை ' பாஸ்கர்

செம்மரக்கட்டை கடத்தல் விவகாரத்தில் சசிகலாவின் உறவினர் கட்டை பாஸ்கரை ஆந்திர போலீஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

சசிகலாவின் அண்ணன் ஜெயராமனின் மகன் விவேக் ஜெயராமனின் மாமனார் பாஸ்கர் சென்னை அண்ணா நகரில் வசித்து வருகிறார். பாஸ்கரின் மகள் கீர்த்தனாவைதான் விவேக் ஜெயராமன் திருமணம் செய்துள்ளார். செம்மரக்கட்டை கடத்தல் விவகாரத்தில் பாஸ்கர் மற்றும் அவரின் தம்பி சிட்டி ராஜா ஆகியோர் மீது வழக்கு நிலுவையில் உள்ளது. ஏற்கனவே , கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்ட , சிட்டி ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.

ஆனால், பாஸ்கர் தொடர்ந்து செம்மரக் கடத்தலில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. செம்மரக் கட்டை கடத்தலை மறைப்பதற்காக பர்னிச்சர் கடை ஒன்றையும் பாஸ்கரன் நடத்தி வந்துள்ளார். இங்கிருந்து, மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் ரூ.48 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்திருந்தனர்.

செம்மரக்கட்டை கடத்தல் வழக்கு உட்பட 28 வழக்குகள் பாஸ்கர் மீது நிலுவையில் உள்ளது. சசிகலாவின் உறவினர் என்பதால் வழக்குகளிலிருந்து பாஸ்கரன் தொடர்ந்து தப்பித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. "கட்டை' பாஸ்கர் என்று அடைமொழி வைத்து இவரை பிற செம்மர கடத்தல்காரர்கள் அழைத்து வந்துள்ளனர். செம்மரக்கட்டை கடத்தல் விவகாரத்தில் பாஸ்கருக்கு தொடர்பு இருப்பதால் தான், விவேக் ஜெயராமனின் திருமணத்திற்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கலந்துகொள்ளாமல் தவிர்த்ததாகவும் சொல்லப்பட்டது.

இந்த நிலையில்தான் 20 பேர் அடங்கிய ஆந்திர தனிப்படை போலீசார் அண்ணா நகரில் இருந்த பாஸ்கரை செம்மரக்கட்டை கடத்தல் விவகாரத்தில் அதிரடியாக கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட பாஸ்கரை ஆந்திராவுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். கடந்த 2017 ஆம் ஆண்டு சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் நண்பர்கள் வீட்டில் வருமான வரி சோதனை நடந்த போது, பாஸ்கர் வீட்டிலும் மூன்று நாட்கள் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments