'எடை குறைந்ததால் புற்றுநோய் பயம்' - நீதிமன்ற அறையில் ஊழியர் தற்கொலை!

அரியலூரில், கேன்சர் பயம் காரணமாக நீதிமன்ற அறையில் நீதிமன்ற நிர்வாக அலுவலர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் பெருமாள் கோவில் தெருவில் இயங்கி வருகிறது, சிறப்பு குடும்ப நல நீதிமன்றம். இந்த நீதிமன்றத்தில் நீதி மன்ற நிர்வாக அலுவலராக பெரம்பலூர் மாவட்டம், கீழப்பெரம்பலூர் கிராமத்தை சேர்ந்த நெடுஞ்செழியன் பணியாற்றி வந்தார். நீதிமன்ற கோப்புகளை தனது அறைக்குக் கொண்டுசென்று பார்ப்பதாகக் கூறிவிட்டு தனது அறைக்குச் சென்ற நெடுஞ்செழியன் நீண்ட நேரமாக வெளியே வரவில்லை. இதையடுத்து, நீதிமன்ற பணியாளர்கள் நெடுஞ்செழியனின் அறைக்குச் சென்று பார்த்தபோது அறையிலிருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதனால், அதிர்ச்சி அடைந்த நீதிமன்ற பணியாளர்கள் இதுகுறித்து அரியலூர் காவல்துறைக்குப் புகார் செய்தனர். சம்பவத்தைக் கேள்விப்பட்ட தலைமை நீதிமன்ற பணியாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திற்கு முன்பு குழுமியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த போலீசார் நெடுஞ்செழியனின் உடலைக் கைப்பற்றினர். அப்போது நெடுஞ்செழியனின் சட்டைப் பையிலிருந்து கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றினர். இதையடுத்து, நெடுஞ்செழியனின் உடலைப் பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் கைப்பற்றிய கடிதத்தில், ’2004 ம் ஆண்டு ஏற்பட்ட சாலை விபத்தின்போதும் 2007 ம் ஆண்டு உடல்நிலை சரியில்லாதபோதும் நீதிமன்றத்தின் மூலம் சிகிச்சை பெற நடவடிக்கை எடுத்தார்கள். அதேபோல் கொரோனா காலகட்டத்திலும் எனக்கு பல்வேறு உதவிகள் நீதிமன்றத்தின் மூலம் கிடைத்தன. ஆனால், தற்போது எனது எடை நாளுக்குநாள் குறைந்து வருவதால் எனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது கேன்சர் இருக்குமோ என்ற சந்தேகத்தையும் எனக்கு ஏற்படுத்தி உள்ளது. எனவே, நான் தற்கொலை செய்து கொள்கிறேன்” என்று எழுதப்பட்டுள்ளது.
இந்தத் தற்கொலை சம்பவம் அரியலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த அரியலூர் போலிசார் விசாரணை செய்து வருகின்றனர்..!
Comments