தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இன்று கொரோனா தடுப்பூசி ஒத்திகை

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் ஒத்திகை இன்று நடைபெறுகிறது.
தமிழகத்தில் 17 இடங்களில் ஏற்கனவே தடுப்பூசி ஒத்திகை நடந்த நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் 190 இடங்களில் இன்று ஒத்திகை நடைபெறுகிறது.
இதில், காத்திருப்போர் அறை, தடுப்பூசி போடும் அறை, கண்காணிப்பு அறைகளின் வடிவமைப்பு, நாளொன்றுக்கு 100 பேருக்கு தடுப்பூசி போட ஆகும் நேரம் போன்றவை கணக்கிடப்படும்.
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மொத்தம் 51 இடங்களில் தடுப்பூசிகள் வைப்பதற்கான நடமாடும் குளிர்சாதன சேமிப்பு கிடங்குகள் தயார்நிலையில் உள்ளன.
சென்னை பெரியமேட்டில் மத்திய அரசுக்கு சொந்தமான மருந்து சேமிப்பு கிடங்கு உள்ளது. இங்கு தடுப்பு மருந்தை பதப்படுத்தி வைப்பதற்காக 3 நடமாடும் குளிர்சாதன சேமிப்பு கிடங்குகள் உள்ளன. கொரோனாவுக்கென 2 கிடங்குகள், 2 முதல் 8 டிகிரி வெப்பநிலையில் பிரத்யேகமாக உள்ளன.
சுகாதாரப்பணியாளர்களுக்கு தடுப்பூசி போட மத்திய அரசு முதற்கட்டமாக 33 லட்சம் ஊசிகளை ஒதுக்கி உள்ளது. இதுபோக தமிழகத்தில் 17 லட்சம் ஊசிகள் கையிருப்பில் உள்ளன. இதனை மாவட்ட வாரியாக பிரித்து, ஒவ்வொரு மாவட்டத்துக்கும் சுகாதாரப்பணியாளர்களின் அடிப்படையில் ஒதுக்கீடு செய்யும் பணி நடந்து வருகிறது.
6 லட்சம் சுகாதாரப் பணியாளர்களுக்கு 2 ஆயிரத்து 850 மையங்களில் ஒரு நாளைக்கு நூறு பேர் வீதம் தடுப்பூசி போடப்படும்.
தமிழக சுகாதாரத்துறையிடம் இரண்டரை கோடி தடுப்பு மருந்துகள் சேமித்து வைத்துக் கொள்ள போதுமான வசதிகள் உள்ளன. தடுப்பூசி போடுவதற்கு இணையதளத்தில் பதிவு செய்யும் போதே, அவர்களுக்கு அருகில் உள்ள மையத்தின் விவரம் கிடைத்து விடும்.
18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு, குறிப்பாக முதியவர்களுக்கு முன்னுரிமை வழங்கி தடுப்பூசி போடப்படும். குழந்தைகள், கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி வழங்குவது குறித்து மருத்துவ வல்லுநர் குழுவுடன் ஆலோசிக்கப்படும்.
இதனிடையே, கொரோனா தடுப்பூசி போடும் பணிகளைப் பார்வையிடுவதற்காக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் சென்னை வந்துள்ளார். பெரியமேட்டில் உள்ள மத்திய மருந்து கிடங்கு, சென்னை ராஜிவ் காந்தி மற்றும் ஓமந்தூரார் அரசு மருத்துவமனை ஆகியவற்றில் ஆய்வு மேற்கொள்ளும் அவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.
Comments