கலவரத்திற்கு இடையில் ஜோ பைடன் வெற்றி... தோல்வியை ஒப்புக் கொண்ட டிரம்ப்..!

0 2898

அமெரிக்க நாடாளுமன்றத்தை முற்றுகையிட நடைபெற்ற கலவரத்தில் 4 பேர் பலியான நிலையில், ஜோ பைடன் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தோல்வியை ஒப்புக் கொள்வதாக அறிவித்துள்ள டிரம்ப், அதிகார மாற்றத்திற்கு வழிவிடுவதாக கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றி பெற்றார். இவர் வருகிற 20ந்தேதி நடைபெற உள்ள பதவியேற்பு விழாவில் முறைப்படி அமெரிக்காவின் 46வது அதிபராக பொறுப்பேற்க உள்ளார்.

ஜோ பைடனின் தேர்தல் வெற்றியை உறுதி செய்து, அதற்கான சான்றிதழை வழங்கும் பணிகளை அமெரிக்க நாடாளுமன்றம் மேற்கொண்டது. தேர்தல் சபை வாக்குகளை எண்ணி முறைப்படி வெற்றிச் சான்றிதழை வழங்குவதற்காக, துணை அதிபர் மைக் பென்ஸ் தலைமையில் நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டம் தொடங்கியது.

இந்த பணிகளை தடுத்து நிறுத்த டிரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர்.

ஒரு கட்டத்தில் டிரம்ப் ஆதரவாளர்கள், தடுப்புகளை மீறி நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற சபாநாயகரின் அலுவல் அறைக்குள் அத்துமீறி நுழைந்த டிரம்ப் ஆதரவாளர்கள், சபாநாயகரின் இருக்கையிலும் அமர்ந்து அமளியில் ஈடுபட்டனர். அவர்களை வெளியேற்ற முயன்றபோது, போலீசாருக்கும் டிரம்ப் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் உருவானது.

வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் பெண் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்தனர். பின்னர் டிரம்ப் ஆதரவாளர்கள் விரட்டியடிக்கப்பட்டு, நாடாளுமன்ற வளாகம் முழுவதும் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் வந்தது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மீண்டும் நாடாளுமன்ற கூட்டம் தொடங்கியது.

இந்த கூட்டத்தில் ஜோ பைடன் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதை அங்கீகரித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் ஜோ பைடனுக்கு அதிபர் தேர்தலில் வென்றதற்கான சான்றிதழும் அளிக்கப்பட்டது.

இதனிடையே நாடாளுமன்ற வளாக வன்முறை தொடர்பாக 52 பேரை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் தலைநகரில் ஊடரங்கும், அவசரநிலையும் 15 நாட்களுக்கு பிரகடனப் படுத்தப்படுவதாக வாஷிங்டன் மேயர் முரியல் பௌசர் அறிவித்துள்ளார்.

இதனிடையே தோல்வியை ஏற்றுக் கொள்வதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். அதிபர் பதவிக்கான அதிகாரமாற்றம் நடைபெற ஒத்துழைப்பதாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால் தேர்தல் முடிவுகளை தாம் ஏற்கவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிகழ்ந்த வன்முறைக்கு உலக நாடுகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி, நாடாளுமன்றத்தில் நேர்ந்த கலவரம் கவலை அளிக்கிறது என்றும், ஜனநாயக நடைமுறைகளை வன்முறையால் மாற்ற முயற்சிக்க கூடாது என்றும் கூறியுள்ளார். அதிகார மாற்றத்திற்கு அமைதியான முறையில் வழி விட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments