பாலியல் தொல்லை.... பேராசிரியர் சஸ்பெண்ட்.! மகளிர் காவல் ஆய்வாளர் அலட்சியம்

0 4355

ஞ்சாவூரில், பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர், மாணவிகள் செல்போனுக்கு ஆபாச எஸ்எம்எஸ், புகைப்படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை அளிப்பதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக அந்த நபர், சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில், சிஎஸ்ஆர் கூட தராமல், மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் ஒருவர், அலையவிடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தஞ்சாவூர் வல்லத்தில், பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இங்கு பேரிடர் மேலாண்மைத்துறை பேராசிரியராக ஸ்ரீலால்பாண்டியன் என்பவர் பணியாற்றுகிறார். இவர் மீது, தஞ்சாவூர் பிலோமினாள் நகர் பகுதியில் வசிக்கும், முன்னாள் இராணுவ வீரர் ஒருவர், வல்லம் டிஎஸ்பி.யிடம் கடந்த டிசம்பர் மாதம் 28ஆம் தேதி புகார் அளித்தார்.

அதில், தனது மகள், அந்த பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக்கழகத்தில், 2ஆம் ஆண்டு பிஎஸ்சி படிப்பதாகவும், அவரது செல்போனுக்கு, பேராசிரியர் ஸ்ரீலால்பாண்டியன், ஆபாச எஸ்எம்எஸ்களை அனுப்புவதோடு, வாட்ஸ்அப்பில், ஆபாச புகைப்படங்களை அனுப்புவதாக, புகார் மனுவில் தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தனது மகள் மட்டுமின்றி, மேலும் 6 மாணவிகளுக்கு, பாலியல் தொல்லை அளிப்பதாகவும், புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். அந்த பேராசிரியரின் பாலியல் தொல்லை தாளாமல், தமது மகளும், அவரது தோழியும், தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு, காப்பாற்றப்பட்டிருப்பதாகவும், தனது புகார் மனுவில், முன்னாள் இராணுவ வீரர், ஆற்றாமையோடு விவரித்துள்ளார். இந்த புகார் மனு குறித்து, வல்லம் அனைத்து மகளிர் காவல்நிலை போலீசார் விசாரிக்க, டிஎஸ்பி உத்தரவிட்டார். ஆனால், இந்த புகார் மனு மீது, சிஎஸ்ஆர் கூட தராமல், வல்லம் மகளிர் காவல்நிலைய போலீசார், தொடர்ந்து அலைகழிப்பதாக, பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை வேதனை தெரிவித்துள்ளார்.

சிஎஸ்ஆர் கூட தராமல் அலைகழிப்பதாக கூறப்படும், வல்லம் மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் கலைவாணி, பாதிக்கப்பட்ட மாணவியின் வீட்டிற்கு சென்று, விசாரணை என்ற பெயரில், ஒரு மணி நேரம் விசாரித்து விட்டு, ஜனவரி 4ஆம் தேதி போலீஸ் ஸ்டேசனுக்கு வாருங்கள் எனக்கூறி சென்றுள்ளார்.

இதன்படி, கடந்த 4ஆம் தேதி, வல்லம் அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு, பாதிக்கப்பட்ட தனது மகள், மனைவி உள்ளிட்டோருடன், முன்னாள் இராணுவ வீரர் சென்றுள்ளார். காலையில் இருந்து, இரவு 9 மணி வரை, அனைவரையும் காத்திருக்க வைத்த காவல் ஆய்வாளர் கலைவாணி, விசாரணை நடத்தாமல் திருப்பி அனுப்பியதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

பேராசிரியர் ஸ்ரீலால்பாண்டியன் மீதான பாலியல் தொல்லை புகார் குறித்த விவரங்கள் தெரிந்திருந்தும், அவன் மீதான நடவடிக்கை குறித்து கேட்டபோது, வல்லம் பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக்கழக நிர்வாகம் முதலில் பதில் சொல்ல தயக்கம் காட்டியது. பின்னர், விருதுநகர் பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரம் போல், பிரச்சினை விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கும் என்பதை உணர்ந்ததாலோ என்னவோ, அவசர, அவசரமாக, அந்த பேராசிரியர் ஸ்ரீலால்பாண்டியனை சஸ்பெண்ட் செய்துள்ளது.

பேராசிரியரின் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட மாணவிகள் விவகாரம் தொடர்பாக வல்லம் மகளிர் காவல்நிலைய, காவல் ஆய்வாளர் கலைவாணியிடம், விளக்கம் பெற முயற்சிக்கப்பட்டது. ஆனால், போனை எடுத்த காவலரிடம், செய்தியாளரை லைனில் வைத்துக் கொண்டே, வெளியில் கிளம்பிவிட்டதாக கலைவாணி சொல்ல சொல்லும், ஆடியோ பதிவாகியுள்ளது.

பாலியல் தொல்லை, வன்கொடுமை, குடும்பவன்முறைகள் உள்ளிட்ட குற்றங்களில் பெண்கள் பாதிக்கப்படும்போது, அவர்களுக்கு எதிரான குற்றம் புரிந்தவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அமைக்கப்பட்டவை தான், மகளிர் காவல்நிலையங்கள். ஆனால், தஞ்சாவூர் வல்லம் அனைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் கலைவாணி, பாதிக்கப்பட்ட மாணவிகள் தரப்பில் கொடுத்த புகார் மனு மீது வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்காமல், அலையவிட்டு, பாவ்லா காண்பிப்பது எந்தவிதத்திலும், சரியான செயலாக இருக்காது என்பதே, சமூக ஆர்வலர்களின் கருத்தாகும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments