'கால்கள் முடங்கும் கனவுகள் முடங்காது!'- சக்கர நாற்காலியில் உலகம் சுற்றும் பெண்

0 1629
Pic credits: mathrubhumi

50 வயதான பர்விந்தர் சாவ்லா என்ற பம்முவிற்கு உலக நாடுகளின் சின்னங்களை தனது பாஸ்ப்போர்ட்டில் முத்திரை பதிக்க வேண்டும் என்பதே ஆசை. இதுவரை அவர் 59 நாடுகளுக்குச் சென்றுள்ளார். தனது 50 வயதிற்குள், 50 நாடுகளுக்குச் செல்லவேண்டும் என்பதே அவரது ஆசை.

லூதியானாவில் பிறந்து டெல்லி மற்றும் மும்பையில் வளர்ந்தவர் பர்விந்தர் சாவ்லா. இவர் தனது 15 வயதில் முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டார். ஆனால் அந்த முடக்கு வாதத்தால் அவர் கால்கள் முடங்கியதே தவிர கனவுகள் முடங்கவில்லை. தனது தானியங்கி சக்கர நாற்காலிகொண்டு 59 நாடுகளை வலம் வந்துள்ளார் பர்விந்தர் சாவ்லா.

மும்பை பல்கலைக்கழகத்தில் பி.காம் வரை படித்த பம்மு, ஹோட்டல் ஒன்றில் வரவேற்பாளராகவும், பின் கால் சென்டர் ஒன்றிலும் பணியாற்றியுள்ளார்

பம்முவிற்கு பூப்பந்து , ஸ்கேட்டிங் ,நடனம் , நீச்சல், மலையேறுதல், பனிச்சறுக்கு ஆகியவற்றிலும் ஈடுபாடு உண்டு. பாராகிளைடிங்கில் ஆர்வம் கொண்ட பம்மு தைவான் பயணம் சென்றபொழுது பாராகிளைடடிங் செய்துள்ளார்.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் பயணங்கள் முடங்கியபோதும், தன் தானியங்கி ஒற்றை கார் கொண்டு இந்திய நாட்டின் இடங்களை சுற்றிப்பார்க்க கிளம்பினார் பர்விந்தர் சாவ்லா. பத்ரிநாத் , ஜெய்ப்பூர் , கன்னியாகுமரி , கேதார்நாத் , மதுரை , ஊட்டி, ராமேஸ்வரம் மற்றும் உஜ்ஜைன் ஆகிய இடங்களைச் சுற்றிப்பார்த்து மகிழ்ந்தார்.

கடவுள் மீது மிகுந்த பற்றுக்கொண்ட அவர், தன் ஒவ்வொரு பயணம் தொடங்கும்பொழுதும் 20 நிமிடம் கடவுளை தொழுதுவிட்டு தான் கிளம்புவார். அவர் சந்திக்கும் புதிய மக்கள் அவரிடம் காட்டும் அன்பே அவரது பயணத்தை ஊக்குவிக்கிறது.

”தேவையான உற்சாகமும், ஆர்வமும் இருந்தால் வாழ்க்கை ஹோலி பண்டிகையைப் போல வண்ணமயமாக இருக்கும்” என்று, வாழ்க்கை மேல் நம்பிக்கை இழந்த அனைவருக்கும் தன் வார்த்தைகளால் உற்சாகமூட்டுகிறார் இந்த உலகம் சுற்றும் பட்டாம்பூச்சி..

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments