இந்தியாவில் இப்படி ஒரு அழகான கிராமம்... திரும்பி பார்க்க வைக்கும் காரக்காடு!

0 199072

ஐரோப்பிய கிராமங்களையே அழகில் தோற்கடிக்குமளவுக்கு கேரளாவில் ஒரு கிராமம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மிக சுத்தமான மாநிலங்களில் கேரளாவும் ஒன்று. ஏற்கெனவே, இயற்கை இந்த மாநிலத்துக்கு அழகை கொட்டிக் கொடுத்திருக்கிறது. அழகான கடற்கரைகள், உப்பங்கழிகள், நெடு நெடுவென தென்னைகள், ஓங்கி உயர்ந்த மலை முகடுகள், அழகிய ஆறுகள், பிரமாண்ட அணைகள், பசுமை நிறைந்த அடர்ந்த காடுகள், புகழ்பெற்ற இந்து கோயில்கள் நிறைந்த மாநிலம் கேரளம். இதனால், இந்த குட்டி மாநிலத்துக்கு கடவுளின் சொந்த தேசம் என்ற செல்லப்பெயரும் உண்டு. இந்த நிலையில், கேரள அரசு தங்கள் கிராமங்களை மேலும் அழகுப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியான காரக்காடு என்ற கிராமத்தை ஐரோப்பிய நாட்டு கிராமங்களுக்கு இணையாக அழகு படுத்தி ஜொலிக்க வைத்துள்ளது.image

கோழிக்கோடு மாவட்டத்தில் வடகரா அருகே காரக்காடு என்ற சிறிய கிராமம் உள்ளது. 100 ஆண்டுகளுக்கு முன்பு கேரளத்தில் பின்தங்கிய மக்களுக்கு எதிராக நடந்த அக்கிரமங்களை எதிர்த்து போராடிய சமூக சீர்திருத்தவாதி ஸ்ரீ வக்பதானந்த குரு இந்த காரக்காடு கிராமத்தில்தான் தங்கியிருந்தார். கேரள மக்களின் சமூக முன்னேற்றத்துக்காக திருவாங்கூர் பகுதியில் ஸ்ரீ நாராயண குரு போராடி வந்தார் என்றால் மலபார் பகுதியில் வக்பதானந்த குரு போராடிக் கொண்டிருந்தார். இதனால், மலபார் ஸ்ரீ நாராயணகுரு என்ற செல்லப் பெயரும் இவருக்கு உண்டு. ஆத்ம வித்யா சங்கம் என்ற அமைப்பையும் தொடங்கி இவர், ஆன்மீக சேவையில் ஈடுபட்டார்.

தலசேரியில் பிறந்தாலும் வக்பதானந்தா குரு காரக்காடு பகுதியை தன் ஆன்மீக மையமாக மாற்றி இயங்கினார். தன் வாழ்நாள் முழுவதும் கேரள மக்களின் முன்னேற்றத்தை பற்றியே சிந்தித்த வக்பதானந்தா குரு கடந்த 1939 - ஆம் ஆண்டு மறைந்தார். வக்பதானந்தா குருவின் தியாகத்தையும் சமூக சேவையையும் போற்றும் வகையில் காரக்காடு பகுதியில் அழகிய நினைவிடம் எழுப்ப கேரள அரசு முடிவு செய்தது. இதற்காக, கேரள அரசு 2.80 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியிருந்தது.image

வக்பதானந்தா குரு நினைவிடத்தை ஒட்டி விளையாட்டு திடல், பொழுது போக்கு பூங்கா , திறந்த உடற்பயிற்சி மையம், பூப்பந்து மைதானம் அழகிய நடைபாதை , மழை சேகரிப்பு தொட்டி , மாற்றுத்திறனாளிகள் எளிதாக பயன்படுத்தும் வகையில் கழிப்பறைகள் போன்றவையும் அமைக்கப்பட்டு வந்தது. இந்த கிராமத்திலுள்ள மீன் சந்தை, பேருந்து நிலையங்கள் கூட மிக அழகாக மாற்றி கட்டப்பட்டுள்ளது. காரக்காடு கிராமமே முற்றிலும் அழகுற கட்டமைக்கப்பட்டது. இந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்ததை தொடர்ந்து, கேரள சுற்றுலாத்துறை அமைச்சர் காடம்பள்ளி சுரேந்திரன் காரக்காட்டில் அமைக்கப்பட்ட வக்பதானந்த குரு நினைவில்லத்தையும் அதை சுற்றி அமைக்கப்பட்ட பிற உள் கட்டமைப்பு வசதிகளையும் திறந்து வைத்தார். இதையடுத்து, இந்த கிராமத்தின் புகைப்படங்கள் கேரளத்தில் சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது. தற்போதைய நிலையில் இந்தியாவிலேயே அழகான கிராமம் காரக்காடுதான் என்று கேரளவாசிகள் காலரை தூக்கி விட்டுக் கொள்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments