பொய் பேசுவதில் சிறந்தவர் ஸ்டாலின்... நோபல் பரிசு கொடுக்கலாம் - முதலமைச்சர் விமர்சனம்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பொய் பேசுவதில் சிறந்தவர் என நோபல் பரிசு வழங்கினால் பொருத்தமாக இருக்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
ஈரோட்டில் 2-வது நாளாக தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பன்னீர் செல்வம் பூங்கா சந்திப்பில் திறந்த வேனில் நின்றவாறு மக்களிடையே உரையாற்றினார். அப்போது பேசிய அவர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் அவதூறு கருத்து, பொய்யான புகார் அனைத்தையும் இந்த தேர்தலில் அதிமுக முடியறிக்கும் என்றார். அம்மா மினி கிளினிக் திட்டத்தை நாடே போற்றுகிற சூழலில் ஒருவர் மட்டும் எதிர்ப்பதாக, மு.க.ஸ்டாலினை முதலமைச்சர் சாடினார்.
ஈரோட்டில் வீடற்ற ஏழை எளிய மக்களுக்கு 1800 வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளதாக கூறிய முதலமைச்சர், 455 கோடி ரூபாயில் ஊராட்சி கோட்டை குடிநீர் திட்டம் செயல் படுத்தபட உள்ளது என்றார்.திண்டல் முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை உயர்மட்ட மேம்பாலம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் கூறினார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சிந்தித்து பேசும் திறன் இல்லாதவர் என்றும், பொய் பேசுவதில் சிறந்தவர் என்றும் விமர்சித்த முதலமைச்சர், பொய் பேசுவதற்காக ஸ்டாலினுக்கு நோபல் பரிசே வழங்கலாம் என்றார்.
சாயக் கழிவு நீர் பிரச்சினைகளை தீர்க்க 21 ஏக்கர் நிலம் கையகபடுத்தபட்டுள்ளது என்றும், மத்திய அரசின் ஒப்புதல் பெற்றவுடன் இதற்கு உடனடி தீர்வு காணப்படும் என்றும் முதலமைச்சர் கூறினார். நடந்தாய் வாழி காவிரி திட்டத்தை மாநில அரசுடன் இணைந்து மத்திய அரசு செயல்படுத்தும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
தொடர்ந்து, வீரப்பன் சத்திரம் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அங்கு 100 அடி உயரக் கொடிகம்பத்தில் அதிமுக கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் பேசிய அவர், கட்டப்பஞ்சாயத்து, அடிதடி செய்யும் கட்சி திமுக என குற்றம்சாட்டினார்.
சித்தோடு நான்கு வழிச்சாலை சந்திப்பில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வெள்ளியால் ஆன வீர வாள் பரிசளிக்கப்பட்டது. அங்கு பேசிய அவர், கல்வியில் தமிழகம் முதன்மை மாநிலமாக இருக்கிறது என்றார்.
940 கோடி ரூபாய் செலவில் கான்கிரீட் தளம் அமைத்து கீழ்பவானி கால்வாய் சீரமைக்கப்படும் எனக்கூறிய முதலமைச்சர், சித்தோடில் இருந்து கோபி வழியாக ஈரோடு வரையிலான நான்கு வழிச்சாலை திட்டத்திற்கு ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளதாக தெரிவித்தார். திமுக ஆட்சிக்கு வந்தால் , அராஜகம் தலைத்தோங்கும் என்றும் முதலமைச்சர் குற்றம்சாட்டினார்.
Comments