மது குடிப்பதற்காக பொங்கல் பரிசுப் பணம் கேட்ட மகனுக்கு நேர்ந்த கதி!

0 5366

நாமக்கல் மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகையான 2500 ரூபாயை குடிக்க கேட்ட மகனை கொன்றுவிட்டு தாய் மற்றும் அவருடைய கள்ளக் காதலன் தலைமறைவான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அடுத்த நல்லூர் வாழ்நாயக்கன் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராணி. இவருடைய மகன் வெள்ளையன் என்கிற தங்கராசு. கூலி வேலை செய்யும் இருவரும் அருகருகே இரண்டு வீடுகளை வாடகைக்கு எடுத்து தனித்தனியாக வசித்து வந்தனர். தங்கராசு தினமும் மது அருந்திவிட்டு தாய் ராணியை அடித்து துன்புறுத்துவதை வாடிக்கையாக வைத்திருந்தார். ஏற்கெனவே திருமணமாகி மனைவியை விட்டு பிரிந்த தங்கராசு தற்போது தாய் ராணி வீட்டின் அருகே தனியாக வாழ்ந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு 11 மணிக்கு தங்கராசு மது அருந்திவிட்டு தனது தாய், மற்றும் தாயின் கள்ளக் காதலன் சுப்பிரமணி ஆகியோரிடம் வழக்கம்போல் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து இன்று காலை அவரது வீட்டின் அருகில் உள்ள தனியாருக்கு சொந்தமான வீட்டு மனை இடத்தில் தங்கராசு மார்பில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனையறிந்த அந்த பகுதி மக்கள் நல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தங்கராசு உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தொடர்ந்து போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் தங்கராசு வீடு பூட்டி இருந்ததும் தாய் ராணி மற்றும் அவரது கள்ளக்காதலன் சுப்பிரமணி ஆகியோர் வீட்டில் இல்லாததும் தெரியவந்தது.

இதனையடுத்து தங்கராசு கொலை செய்யப்பட்டது குறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு மோப்பநாயை வரவழைத்து தொடர் விசாரணையில் ஈடுப்பட்டனர். கொலை செய்யப்பட்ட இடத்திலிருந்து தங்கராசு வீடு வரைக்கும் மோப்ப நாய் ஓடி நின்றுவிட்டது. ஆகையால் கொலையை தாய் ராணி மற்றும் தாயின் கள்ளக்காதலன் சுப்பிரமணி ஆகியோர் செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து ஊர் மக்களிடம் விசாரித்தப் போது, நேற்று தங்கராசுவின் தாய் ராணி பொங்கல் பரிசு தொகை 2500 ரூபாயை வாங்கி வந்ததாக கூறப்படுகிறது. அந்த தொகையை மது அருந்த தரும்படி தங்கராஜ் தாய் ராணியிடமும், தாயின் கள்ளக்காதலன் சுப்பிரமணியிடமும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாக பொதுமக்கள் கூறியுள்ளனர். தங்கராசு கொல்லப்பட்டதையடுத்து தாய் ராணி, மற்றும் கள்ளக்காதலன் சுப்பிரமணி ஆகியோர் அதிகாலை முதல் தலைமறைவாகி உள்ளது போலீசாருக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் தங்கராசுவின் கூட்டாளிகள் யாரும் இந்த கொலையில் ஈடுப்பட்டுள்ளனரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments