மின் கம்பத்தில் இருந்து நேரடி மின் இணைப்பு... துடி துடித்து சரிந்த பிரமாண்ட உருவம்!- குற்றவாளிகள் தலைமறைவு

0 37912

கோவை அருகே விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி உயிரிழந்த காட்டு யானைக்கு கிராமமக்கள் மாலை அணிவித்து கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் போளுவாம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட செம்மேடு அருகே குளத்து ஏரி பகுதியில் துரை என்பவரின் வயலில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின் வேலியில் சிக்கி 22 வயது மதிக்கத்தக்க ஆண் யானை பரிதாபமாக உயிரிழந்தது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டபோது மின் கம்பத்தில் இருந்து நேரடியாக மின்சாரத்தை திருடி மின்வேலிக்கு இணைப்பு கொடுத்திருப்பது தெரியவந்தது தொடர்ந்து நிலத்தின் உரிமையாளர் ரவி மற்றும் குத்தகைதாரர் துரை ஆகியோர் மீது வன உயிரின சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. யானை உயிரிழந்த சம்பவத்தையடுத்து  இருவரும் தலைமறைவாகி விட்டனர். உயிரிழந்த யானையின் உடல் பிரேத பரிசோதனைக்காக சாடிவயல் யானைகள் முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது, அங்கு கூடிய கிராம மக்கள் யானைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்திய காட்சிகள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.image

இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில் , நாங்கள் வசிக்கும் பகுதியில் யானைகளால் மனிதர்களுக்கும் மனிதர்களால் யானைகளுக்கும் எந்த தீங்கும் ஏற்பட்டதில்லை தற்போது மின் வேலியில் சிக்கி யானை உயிரிழந்திருப்பது வேதனை அளிப்பதாக கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

வனத்துறையினர் கூறுகையில், '' துரை என்பவர் சட்டவிரோதமாக மின் கம்பத்தில் இருந்து மின்சாரத்தை திருடி மின் வேலியில் செலுத்தியுள்ளார். நெல் வயலைச் சுற்றிலும் முறைகேடாக மின்வேலி அமைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டு அகற்றப்பட்டுள்ளது. மின்சார வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. யானைகள் ஊருக்குள் வந்தால் வனத்துறையினருக்கு தகவல் அளிக்க வேண்டும் . தகவல் அளிக்கும் பட்சத்தில் சம்பவ இடத்திற்கு வந்து வனத்துறையினர் யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியை மேற்கொள்வார்கள் . இதுபோன்ற சட்ட விரோதமாக மின் வேலி அமைக்க வேண்டாம் . மின் வேலி அமைப்பது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது வன உயிரின சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று எச்சரித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments