“எங்களுக்கு களி என்றால் ஸ்டாலினுக்கு பிரியாணியா ?” முதலமைச்சர் கேள்வி
தாமும் அமைச்சர்களும் களி சாப்பிடப் போகிறோம் என்றால் திமுக தலைவர் ஸ்டாலின் மட்டும் பிரியாணியா சாப்பிடப்போகிறார் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
ஈரோடு மாவட்டத்தில் இரண்டு நாள் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பவானியில் நடந்த பொதுக் கூட்டத்தில் மக்களிடையே உரையாற்றினார்.
திமுக தலைவர் ஸ்டாலின் நடத்தும் கிராம சபை கூட்டங்களால் மக்களுக்கு என்ன பயன் என்று கேள்வி எழுப்பிய முதலமைச்சர், நாடாளுமன்ற தேர்தலின் போதும் இதே போல கூட்டம் நடத்தி மனுக்கள் வாங்கினார் என்றும் அந்த மனுக்களின் தற்போதைய நிலை என்ன என்றும் வினவினார்.
இதுவரை டெண்டரே விடப்படாத திட்டத்தில் ஊழல் என்று ஆளுநரிடம் மு.க.ஸ்டாலின் பொய் புகார் அளித்துள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். தேர்தலுக்கு பிறகு அதிமுக அமைச்சர்கள் களி சாப்பிடப்போகிறார்கள் என்றால் ஸ்டாலின் மட்டும் என்ன பிரியாணியா சாப்பிடப்போகிறார்? என்று கேள்வி எழுப்பிய முதலமைச்சர், திமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களை பட்டியலிட்டார்.
மேலும் திமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களை 3 மாதத்தில் விசாரித்து தீர்ப்பு வரும் போது யார் சிறை செல்வார்கள் என்பது தெரியவரும் என்று அவர் குறிப்பிட்டார்.
தமிழக அரசு எதுவும் செய்யவில்லை என ஸ்டாலின் கூறுவதாகக் கூறிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நல்ல ஆட்சி கொடுத்ததால் தான் பல்வேறு விருதுகளை தமிழக அரசு பெற்றுள்ளது என்றும் கல்வி, உறுப்புமாற்று அறுவைசிகிச்சை, போக்குவரத்து, மின்சாரம் உள்ளிட்ட துறைகளுக்கு தேசிய விருது கிடைத்துள்ளது என்றும் பெருமிதம் தெரிவித்தார்.
பொதுக்கூட்டத்தைத் தொடர்ந்து சிறுகுறு தொழில் முனைவோருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடினார். இதில் அமைச்சர்கள் செங்கோட்டையன் ,கருப்பண்ணன், தங்கமணி, உள்ளிட்டோரும் பங்கேற்றனர். கொரோனா ஊரடங்கு காரணமாக ஜமுக்காள விற்பனை மந்தமாக உள்ளதை அரசு கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கும் என முதலமைச்சர் கூறினார்.
Comments