பறவைக் காய்ச்சல்: 8 மாநிலங்களுக்கு எச்சரிக்கை
பறவைக் காய்ச்சலுக்கு பல்லாயிரக்கணக்கில் பறவைகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து கேரளா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 8 மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து வலசை வந்த பறவைகளால் இந்தியாவில் பல மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவி வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக பல்வேறு மாநிலங்களில் பறவைக் காய்ச்சலால் ஆயிரக்கணக்கான பறவைகள் உயிரிழப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
கேரளாவில் உள்ள பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகள், வாத்துகளுக்கு H5N8 வைரஸ் பாதிப்பால் பறவைக் காய்ச்சல் இருந்ததை அடுத்து, 40 ஆயிரம் கோழிகள் மற்றும் வாத்துக்கள் உயிருடன் புதைக்கப்பட்டன.இதையடுத்து கோட்டயம், ஆலப்புழா மாவட்டங்கள் பேரிடர் பாதித்த பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
மத்தியப் பிரதேசத்தில் 10 மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான காகங்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து அங்கு பொது சுகாதார எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இமாச்சல் பிரதேச மாநிலத்தில் வலசை வந்த பறவைகள் உயிரிழந்ததால் அதனைச் சுற்றியுள்ள 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு எச்சரிக்கை மண்டலமாகவும், அங்கிருந்து இறைச்சி, முட்டை விற்பதற்கான அனுமதியையும் மாநில அரசு மறுத்துள்ளது.
இந்நிலையில் தமிழக, கேரள எல்லையில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு கேரளாவிலிருந்து வரும் அனைத்து வாகனங்களும் கிருமிநாசினி தெளிக்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.
பறவைக் காய்ச்சல் தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், இக்காய்ச்சல் கால்நடைகளைப் பாதித்தாலும் மனிதர்களுக்கும் வரலாம் என்று குறிப்பிட்டார்.
கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி ஆகிய கேரள எல்லையோர மாவட்டங்களில் 26 செக்போஸ்ட்டுகளில் தீவிர சோதனை நடத்தப்படுகிறது என்றும் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் சுகாதாரத்துறை ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
Comments