சென்னையில் கனமழை.. தத்தளித்த நகரவாசிகள்..!

சென்னையில் பெய்த தொடர் மழையால் சாலைகள் வெள்ளக்காடாகின. பெருக்கெடுத்து ஓடிய மழை நீரால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றின் திசைவேக மாறுபாடு காரணமாக, சென்னையில் நேற்றிரவு முதல் இருந்து கனமழை கொட்டி தீர்த்தது.
காமராஜர் சாலை, ராயப்பேட்டை பெசன்ட் சாலை, வால்டாக்ஸ் சாலை, எத்திராஜ் கல்லூரி சாலை, எழும்பூர் கண் மருத்துவமனை சாலை உள்ளிட்ட இடங்களில் உள்ள தாழ்வான பகுதிகளில் குளம் போல் மழைநீர் தேங்கியது. கே.கே. நகரிலும் சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.
வேளச்சேரி ராம்நகர் நகரில் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்து, முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியது. அதேபோன்று, சோதனை சாவடி பகுதியில் சாலைகள் வெள்ளக்காடாக மாறின.
பல்லாவரம் ஜி.எஸ்.டி. சாலையில் மழைநீர் வடியும் கால்வாய்களில் குப்பைகள் தேங்கி அடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் வடியாமல் தேங்கி நின்றது. இதனை எந்திரம் மூலம் அகற்றி சீரமைக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.
பீர்க்கன்கரணையில் குடியிருப்பு பகுதிகளை சுற்றி தேங்கி நின்ற மழைநீரோடு சேர்ந்து கழிவுநீரும் கலந்ததால், தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தாம்பரத்திலுள்ள அரசு நெஞ்சக நோய் மருத்துவமனையை சுற்றிலும் முழங்கால் அளவுக்கு மழை நீர் தேங்கியது. அதனை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனிடையே, பெரும்பாலான இடங்களில் மழைநீர் முழுமையாக அகற்றப்பட்டு விட்டதாகவும், 24 இடங்களில் மட்டுமே அகற்றும் பணி நடைபெற்று வருவதாகவும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னை நகரில் காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை சராசரியாக 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக கிண்டியில் 15.5 சென்டி மீட்டர் மழையும், மாம்பலத்தில் 14.3 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
Comments