தன் உயிரை கொடுத்து குழந்தைகளை காத்த தந்தை.. நீரில்மூழ்கியும் குறையாத நெஞ்சுரம்..!

0 3530

அரபிக் கடலில் ஆறுகள் கலக்குமிடத்தில் குடும்பத்துடன் குளித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக நீர்வரத்து அதிகரித்ததால், தனது குழந்தைகளை கைகளில் உயர்த்திப் பிடித்து மீட்க வந்தவர்களிடம் ஒப்படைத்த பின் தந்தை உயிரைவிட்ட வீடியோ காட்சிகள் நெஞ்சை உருக்குவதாக உள்ளன. 

கர்நாடக மாநிலம் தட்சிணகன்னட மாவட்டம் கடபா பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராம் கவுடா. தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கடந்த 31ம் தேதி மங்களூரு அருகே சசிஹித்லு பகுதியில் அரபிக்கடலின் கரையில் உள்ள தனியார் ரிசார்ட்டுக்கு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக வந்துள்ளார். சாம்பவி மற்றும் நந்தினி ஆறுகள், அரபிக்கடலில் இணையும் இடத்தில் இறங்கி குடும்பத்தோடு குளித்துள்ளார். திடீரென ஆற்றில் தண்ணீர் அதிகரித்ததால் குடும்பத்தோடு மூழ்கத்தொடங்கியுள்ளனர்.

தண்ணீரில் தத்தளித்தபடியே அவர்கள் எழுப்பிய கூக்குரலால், ரிசார்ட் ஊழியர்கள் மீட்பு படகில் வந்து, படகிலிருந்து ஒருவர் கயிறை வீசி, நீச்சல் தெரிந்த மற்றொரு நபர் படகிலிருந்து குதித்து அனைவரையும் காப்பாற்றினார்.

அதுவரை தனது இரண்டு குழந்தைகளும் நீரில் மூழ்கிவிடாதபடி கையில் தாங்கிபிடித்தபடியே இருந்துள்ளார், தந்தை ஜெயராம்கவுடா. அனைவரையும் மீட்டு, கரைவந்து சேர்ந்தபோது ஜெயராம்கவுடா ஏற்கெனவே உயிரிழந்துவிட்டது தெரிய வர அந்தக் குடும்பத்தினர் கண்கலங்கி நின்றனர். மீட்புப் பணியில் ஈடுபட்ட நபரும் செய்வதறியாது கலங்கி நின்றார்.

தனது இரண்டு குழந்தைகள் மற்றும் மனைவியை பத்திரமாக பாதுகாத்து, குடும்பத்தலைவன் உயிரைவிட்ட வீடியோ காட்சிகள் நெஞ்சை உருக்குவதாக உள்ளன. சம்பவம் நடைபெற்ற பகுதியில் இருந்தவர்கள் இந்த வீடியோவை எடுத்துள்ளனர். இதனிடையே, சம்பவம் குறித்து கர்நாடகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆபத்தான இடத்தில் சிறுவர்களுடன் குளிக்க ரிசார்ட் நிர்வாகம் அனுமதித்து எப்படி என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments