ஜன.13 முதல் கொரோனா தடுப்பூசி போட வாய்ப்பு - மத்திய அரசு

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி வரும் 13 ஆம் தேதி துவங்க வாய்ப்புள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக கோவாக்சின் மற்றும் கோவிஷில்டு ஆகிய இரு தடுப்பூசி மருந்துகளை அவசர காலத்திற்கு பயன்படுத்த மத்திய அரசு கடந்த 3 ஆம் தேதி அனுமதி அளித்தது.
இந்த நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன், ஒப்புதல் அளிக்கப்பட்ட தேதியில் இருந்து 10 நாட்களுக்குள் தடுப்பூசியை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு தயாராக இருப்பதாக கூறினார். எனினும் இறுதி கட்ட முடிவை மத்திய அரசுதான் எடுக்கும் என்று அவர் தெரிவித்தார்.
இந்தியாவில் சென்னை, மும்பை, கொல்கத்தா, அரியானாவின் கர்னல் ஆகிய 4 நகரங்களில் தடுப்பூசி முதன்மை சேமிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், 37 இடங்களில் இரண்டாம் நிலை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். எத்தனை தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன, எந்த வெப்பநிலையில் வைக்கப்பட்டுள்ளன என்பதெல்லாம் டிஜிட்டல் முறையில் கண்காணிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார். முதல்கட்டமாக தடுப்பூசி போடப்பட இருக்கும் சுதாதாரத்துறை பணியாளர்கள், முன்களப்பணியாளர்கள் தனியாக முன்பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும், தடுப்பூசி வினியோகத்திற்கான கோ வின் செயலியில் இருந்து அதற்கான தரவுகள் பெறப்படும் என்றும் ராஜேஷ் பூஷன் குறிப்பிட்டார்.
Comments