நாடாளுமன்றத்திற்கு புதிய கட்டிடம்... அனுமதி வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பு

0 3950
நாடாளுமன்றத்திற்கு புதிய கட்டிடம்... அனுமதி வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பு

டெல்லியில் நாடாளுமன்றத்திற்கு புதிய கட்டிடத்திற்கான கட்டுமானப்பணிகளுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

டெல்லியில் சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ், மத்திய தலைமைச் செயலகம், மத்திய அமைச்சகங்கள் மற்றும் சுமார் 971 கோடி ரூபாய் செலவில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட உள்ளது.

சென்ட்ரல் விஸ்டா திட்டத்திற்காக மரங்களை வெட்டுவதை எதிர்த்தும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை காரணமாகக் காட்டியும், பாதுகாக்கப்பட்ட லூட்டியன்ஸ் மண்டலத்தில் நில வகையின் பயன்பாட்டை மாற்றியதை எதிர்த்தும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிபதிகள் ஏஎம் கான்வில்கர், தினேஷ் மாஹேஸ்வரி, சஞ்சீவ் கண்ணா அமர்வில் விசாரணை நடைபெற்றது.

வழக்கு நிலுவையில் உள்ளபோதே கட்டுமானத்திற்குரிய பணிகள் தொடங்கப்பட்டு விட்டதாக எழுப்பப்பட்ட ஆட்சேபம் குறித்து கடந்த 7ஆம் தேதி அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், மத்திய அரசின் விளக்கத்தை ஏற்று, பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்ட மட்டும் அனுமதி வழங்கினர். இதைத்தொடர்ந்து கடந்த 10ஆம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

இந்நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ள உச்சநீதிமன்றம், சென்ட்ரல் விஸ்டா திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசுக்கு அனுமதி வழங்கியுள்ளது. 3 நீதிபதிகள் அமர்வில், நீதிபதிகள் ஏஎம் கான்வில்கர், தினேஷ் மாஹேஸ்வரி ஆகியோர் திட்டத்திற்கு அனுமதி வழங்கியுள்ளதுடன், நில வகையின் பயன்பாட்டை மாற்றியது மற்றும் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டதை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

திட்டத்திற்கு அனுமதி வழங்குவதை ஏற்றுள்ள நீதிபதி சஞ்சீவ் கண்ணா, நில வகையின் பயன்பாடு மாற்றத்திற்கு அனுமதி வழங்கப்பட்ட விவகாரத்தில் மாறுபட்ட கருத்தை தெரிவித்துள்ளார். சென்ட்ரல் விஸ்டா திட்டத்திற்கான கட்டுமானப் பணிகளின்போது, தூசுக்கள் காற்றில் கலப்பதை தடுப்பதற்கு தேவையான, வடிகட்டிகள் அடங்கிய smog tower மற்றும் anti-smog guns எனப்படும் நீர்த்தெளிப்பான்களை பயன்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சுதந்திரம் பெற்றதன் 75ஆவது ஆண்டில், நாடாளுமன்ற கூட்டத்தொடர் புதிய கட்டிடத்தில் நடைபெறும் வகையில், 2022ஆம் ஆண்டுக்குள் கட்டுமானப் பணிகளை முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments