ஒரு கூலிப்படை பிச்சைக்காரனின் பிளாக் மெயில் ..! குழந்தைக்காக பரிதாபமாம்..!

0 5286
ஒரு கூலிப்படை பிச்சைக்காரனின் பிளாக் மெயில் ..! குழந்தைக்காக பரிதாபமாம்..!

சென்னையில் தொழில் போட்டியில் ஏற்றுமதி நிறுவன உரிமையாளரை கொலை செய்வதற்கு முன்பணம் பெற்ற கூலிப்படை பிச்சைக்காரர் ஒருவர், கொலை செய்யாமல் இருக்க சம்பந்தப்பட்டவரிடம் 10 லட்சம் ரூபாய் கேட்டு பேரம் பேசி இறுதியில் 25 ஆயிரம் ரூபாய்  பெற்ற நிலையில் கூட்டாளிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.  தலைநகரில் கொலைக்கார கூலிப்படையினரின் பிளாக்மெயில் அட்டகாசம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.

உள்ளத்தை அள்ளித்தா படத்தில் ஆளை கடத்தி பணம் பறிக்குக்கும் மிரட்டல் கூலிப்படையினர் கேட்ட தொகையை கொடுக்க மறுத்ததும், தொகையை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொள்வது போல ஒரு தர்ம சங்கடமான சூழ்நிலை நிஜத்தில் கூலிப்படை பிச்சைக்காரர் ஒருவருக்கு நேர்ந்துள்ளது.

சென்னை அசோக் நகரை சேர்ந்தவர் ஜெய்னீஸ் லாஜிஸ்டிக்ஸ் உரிமையாளர் சுரேஷ், பாரிமுனையில் லட்சங்கள் புழங்கும் ஏற்றுமதி தொழிலில் பிரமலமடைந்து வரும் இளம் தொழில் அதிபரான இவரை கடந்த சில தினங்கள் முன்பு மர்ம நபர்கள் சிலர் ஒன்று கூடி தாக்கி விட்டு தப்பிச்சென்றனர்.

தன்னை தாக்கியது யார் ? எதற்காக தாக்கினார்கள் ? என்பது தெரியாமல் விழி பிதுங்கி போன சுரேஷ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் வீடு திரும்பினார். இந்த நிலையில் சுரேஷின் செல்போன் நம்பருக்கு அழைப்பு விடுத்த மர்ம நபர் ஒருவர் தன்னை கூலிப்படையை சேர்ந்தவன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, கடந்த வாரம் உன்னை தாக்கியவர்கள் தாங்கள் தான் என்றும் உன்னை கொலை செய்வதற்கு உனக்கு வேண்டாதவர் ஒருவர், தங்களுக்கு 5 லட்சம் ரூபாய் பணம் கொடுத்துள்ளதாகவும், வாட்ஸ் அப் டிபியில் உள்ள உன் குழந்தை முகத்தை பார்த்து உன்னை கொலை செய்ய மனசு வரவில்லையென்றும், நீ 10 லட்சம் ரூபாய் கொடுத்தால் யார் ஏவியது ? என்ற உண்மையை சொல்வதாகவும் கூறியுள்ளான். பேரம் பேசுவதில் வல்லவரான சுரேஷ், அவரது மிரட்டலுக்கு அஞ்சுவது போல நடித்து தன்னிடம் தற்போதைக்கு பணமில்லை என்று மறுத்துள்ளார்

ஒரு கட்டத்தில் சுரேஷ், தனது வங்கி கணக்கில் 20 ஆயிரம் ரூபாய் மட்டுமே இருப்பதாக கூறியதால் ஆத்திரம் அடைந்த பிளாக் மெயிலர், எனக்கு என்ன பிச்சை போடூறியான்னு கொதித்ததோடு, உன் பொண்டாட்டி பிள்ளை முகத்தை நினைச்சி பார்த்து பணத்தை ரெடி செய்ய சொல்லி மிரட்டல் விடுத்தான்

முடிவாக தவணை முறையில் பணம் தருவதாக ஒப்புக் கொண்ட சுரேஷிடம், தன்னை ஒரு நண்பராக ஏற்றுக் கொள்ளச்சொன்ன கூலிப்படை பிளாக்மெயிலர் தன்னை வெளியூர் ரவுடி எனக்கூறி முதல் தவணையாக 25 ஆயிரம் ரூபாய் மட்டும் பெற்றுக் கொண்டதோடு, பெட்டிக்கடை மாமூல் ரவுடி போல மீண்டும் மீண்டும் பணம் கேட்டு நச்சரிக்க தொடங்கியதால் சுரேஷ், வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

செல்போன் நம்பரை வைத்து விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார், பிளாக் மெயிலர் கொடுங்கையூர் மணிகண்டன் , தாக்குதலில் ஈடுபட்ட கூட்டாளிகளான எண்ணூர் சரவணபெருமாள், மணலி ரஜினி, வியாசர்பாடி பால்ஜூலியன், முகமது அப்பாஸ், ஏழுகிணறு அப்துல் காலிப், எர்ணாவூர் வேல்முருகன், உள்ளிட்ட 7 பேரையும், தொழில் போட்டியில் 4 லட்சம் ரூபாய் கொடுத்து கூலிப்படையை ஏவிய இன் சூர்யா எக்ஸ்பிரஸ் கார்கோ ஏற்றுமதி நிறுவனத்தின் பொறுப்பாளர் சுரேஷையும் அதிரடியாக கைது செய்தனர்.

கூலிப்படை கும்பலின் தலைவன் வேல் முருகனுக்கு தெரியாமல் தனியாக செயல்பட்ட மணிகண்டன், தனிப்பட்ட முறையில் சுரேஷிடம் பேரம் பேசி தவணை முறையில் பணம் கறக்க மிரட்டியதால், மொத்த கும்பலையும் போலீசில் சிக்க வைத்ததோடு, தன்னை ஏவிய பாஸையும் சேர்த்து கம்பி எண்ண வைத்துள்ளார் என்று சுட்டிக்காட்டுகின்றது காவல்துறை.

அதே நேரத்தில் இது போன்ற பிளாக் மெயில் கூலிப்படை கும்பல்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments