வடிவேலு காமெடி பாணியில் சம்பவம் : சண்டையை விலக்க சென்றவருக்கு நேர்ந்த பரிதாபம்!

0 47313
தாக்கப்பட்ட சதீஷ்

6.2 என்ற படத்தில் நடிகர் வடிவேலு, அண்ணன் - தம்பி இருவர் சண்டையை விலக்க சென்று அடி வாங்கி விட்டு செல்வார். அதே போல, சண்டையை விலக்கி விட்டவருக்கு அடி விழுந்த சம்பவம் சிவகங்கையில் நடந்துள்ளது.

சிவகங்கையை அடுத்த காஞ்சிரங்காலை சேர்ந்தவர் சதீஷ். இவர், காஞ்சிரங்கால் ஊராட்சி மன்றத்தில் 5- வது வார்டு உறுப்பினராக இருந்து வருகிறார். கடந்த 31- ஆம் தேதி நள்ளிரவில் காஞ்சிரங்காலை சேர்ந்த இளைஞர்கள் சிலர் அந்த பகுதியில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த சமயத்தில் அந்த வழியே வந்த இலந்தங்குடிபட்டியை சேர்ந்த பாலா என்பவருக்கும் அந்த இளைஞர்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதைப் பார்த்த வார்டு உறுப்பினர் சதீஷ் இடையில் புகுந்து இரு தரப்புக்கும் சமாதானம் செய்து வைத்துள்ளார்.

மறுநாள் காலை சதீஷிடத்தில் வந்த பாலா தன்னிடத்தில் இரவில் தகராறு செய்த இளைஞர்கள் விவரம் குறித்து விசாரித்துள்ளார். ஆனால் சதீஷ் அந்த இளைஞர்களை பற்றி எதுவும் சொல்ல மறுத்து விட்டதாக தெரிகிறது. இதனால் , அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 3 ஆம் தேதி இரவு சதீஷ் ஹோட்டலுக்கு டிபன் வாங்க சென்றுள்ளார். அப்போது, பாலா மற்றும் அவரின் நண்பர்கள் கௌதம், பிரபாகரன் உள்ளிட்ட சிலர் கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் வந்து சதீஷை கடத்திச் சென்றனர். பின்னர் , ஆள் இல்லாத பகுதியில் வைத்து சதீஷை தாக்கி அவர் அணிந்திருந்த 3 பவுன் செயின் ஒரு பவுன் மோதிரம் மற்றும் பணத்தை பறித்துக் கொண்டுள்ளனர்.

பிறகு, பெருமாள்பட்டி அருகே பைபாஸ் ரோட்டில் சதீஷை காரிலிருந்து கீழே தள்ளிவிட்டு அந்த கும்பல் தப்பி சென்று விட்டது. காயம் அடைந்த சதீஷ் சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

இது தொடர்பாக, சிவகங்கை நகர் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் சப்- இன்ஸ்பெக்டர் முருகானந்தம் ஆகியோர் விசாரணை நடத்தி பாலா,கௌதம், பிரபாகரன் உள்ளிட்ட 11 பேர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments