சென்னை உயர்நீதிமன்றத்தின் 50ஆவது தலைமை நீதிபதியாக சஞ்சீப் பானர்ஜி பதவியேற்பு

சென்னை உயர்நீதிமன்றத்தின் 50ஆவது தலைமை நீதிபதியாக சஞ்சீப் பானர்ஜி பதவியேற்றுக் கொண்டார்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ஏ.பி.சாஹி பதவிக் காலம் முடிவடைந்ததை அடுத்து, அப்பதவிக்கு கொல்கத்தா உயர் நீதிமன்ற மூத்த நீதிபதிகளில் ஒருவரான சஞ்சீப் பானர்ஜியை குடியரசுத் தலைவர் நியமித்தார்.
இந்நிலையில், ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில், சஞ்சீப் பானர்ஜிக்கு, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
நிகழ்ச்சியில் சபாநாயகர் தனபால், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள், உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவம், சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் மற்றும் இந்நாள் நீதிபதிகள், டிஜிபி, சென்னை காவல் ஆணையர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அவர்கள் அனைவரும் தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜிக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
1862ல் நிறுவப்பட்ட சென்னை உயர் நீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாகவும், சுதந்திரத்திற்கு பிறகான 31வது தலைமை நீதிபதியாகவும் சஞ்சீப் பானர்ஜி பதவியேற்றுள்ளார்.
பின்னர் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வரவேற்பு விழாவில் ஏற்புரை ஆற்றிய தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, திருவள்ளுவரின் மண்ணுக்கு வந்துள்ளது பெருமை அளிப்பதாக பெருமிதம் தெரிவித்தார்.
நாட்டிலேயே ஒரு மொழியின் பெயரை கொண்டுள்ள மாநிலம் என்றால் அது தமிழ்நாடு என்றும், தொன்மையான மொழியாம் தமிழை இன்னும் கோடிக்கணக்கானோர் செருக்கோடு பெருமையோடும் பேசி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இசை, பாரம்பரியம், நடனம், இலக்கியம், கலாச்சாரம் என அனைத்திலும் தனித் தன்மையோடு சிறந்து விளங்கும் தமிழகம் தன்னுடைய மாநிலம் எனவும், இது தன்னுடை மற்றுமொரு தாய் வீடு எனவும் சஞ்சீப் பானர்ஜி தெரிவித்தார்.
Comments