புதைக்க இடமில்லாமல் தவிக்கும் அமெரிக்கா... மீண்டும் உச்சம் தொட்ட கொரோனா..!

0 22212

அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது, அமெரிக்க மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் சீனாவின் வூகான் நகரில் தொடங்கிய வைரஸ் பல்வேறு நாடுகளுக்கும் பரவியது. கொரோனா தொற்றினால் ஐரோப்பிய நாடுகள் படுமோசமான நிலையை எதிர்கொண்டது. இதுவரை உலகளவில் 8 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 18 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையே கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் களமிறங்கின. கொரோனாவுக்கு எதிராக அவசரகாலமாக ஃபைசர் பையோஎன்டெக் நிறுவனத்தின் தடுப்பூசியை போட்டுக்கொள்ள உலகிலேயே முதல் நாடாக இங்கிலாந்து அரசு அனுமதி அளித்தது. தடுப்பூசி வந்துவிட்டது, கொரோனா தொற்று இன்னும் கொஞ்ச நாட்களில் குறைந்து விடும் என இங்கிலாந்து மக்கள் எதிர்பார்ப்பில் இருந்தனர்.

ஆனால் இங்கிலாந்து மக்களின் எதிர்பார்ப்பு தலைகீழாக மாறியது. கொரோனா தொற்று வளர்சிதை மாற்றம் அடைந்து உருமாறி புதிய கொரோனா வைரசாக மாறியது. இது முன்பு இருந்த வைரஸை விட பல மடங்கு வீரியம் கொண்ட வைரஸ் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். இதனால் இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, மீண்டும் உச்சத்தை எட்ட தொடங்கின.

இதனைதொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு நாடுகள் இங்கிலாந்துடனான விமானப்போக்குவரத்தை துண்டித்தன. இப்படி பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தாண்டி உருமாறிய கொரோனா வைரஸ் ஆப்ரிக்கா, இந்தியா, சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் நுழைந்தது.

அமெரிக்காவின் பல மாகாணங்களில் புதிய கொரோனா வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. வீரியமிக்க கொரோனா பரவ தொடங்கியதையடுத்து அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டுக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவிலும் பைசர், மடார்னா என்ற இரு வகையான தடுப்பூசிகள் மக்களின் பயன்பாட்டுக்கு வந்த நிலையிலும் கூட உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது.

நேற்று ஒரு நாள் மட்டும் அமெரிக்காவில், இதுவரை இல்லாத அளவிற்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உச்சத்தை எட்டியுள்ளது. 2,27,000 பேர் நேற்று ஒரு நாள் மட்டும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் இதுவரை 3,50,000க்கும் அதிகமானோர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் நிரம்பி வழியும் உயிரிழப்புகளால், இறந்த உடல்களை புதைப்பதற்கு கூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கர்கள் தெரிவித்து வருகின்றனர்.

தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்தும் கூட இங்கிலாந்து - அமெரிக்கா போன்ற நாடுகளில் கொரோனா நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டுக்கொண்டிருக்கிறது. இந்த செய்தி அந்நாட்டு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவை பொருத்தவரை கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் தடுப்பூசி ஒத்திகை நடைப்பெற்றது.

இந்தியா சார்பில் கோவாக்சின் , கோவிஷீல்ட் என்ற இரண்டு தடுப்பூசிகள் தயார் நிலையில் உள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேக்கர் தெரிவித்தார். இந்தியாவில் தடுப்பூசி போடும் பணிகளுக்கு தேசிய அளவிலான ஒத்திகை நடைப்பெற்று முடிந்துள்ளதும் குறிப்பிடதக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments