தூத்துக்குடி மாவட்டத்தில் முதலமைச்சர் தேர்தல் பரப்புரை

0 1524
தூத்துக்குடி மாவட்டத்தில் முதலமைச்சர் தேர்தல் பரப்புரை

விவசாயிகளின் விளைபொருட்களை அரசே கொள்முதல் செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் திட்டமிட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோவில்பட்டி அருகே நாலாட்டின்புத்தூரில் வெள்ளையரின் ஆதிக்கத்துக்கு எதிராக வீரப்போர் புரிந்த வீரபாண்டிய கட்டபொம்மனின் 262ஆவது பிறந்த நாள் விழாவையொட்டி அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

கோவில்பட்டி அருகே வில்லிசேரியில் பருத்தி விவசாயிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், விவசாயிகளுக்குத் தேவையான நீரைச் சேமிப்பதற்காகக் குடிமராமத்து திட்டம் கொண்டுவரப்பட்டதாகத் தெரிவித்தார். விவசாயிகளிடம் இருந்து விளைபொருட்களைக் கொள்முதல் செய்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் திட்டத்தை எதிர்காலத்தில் அரசு செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்.

கோவில்பட்டியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மக்காச்சோளத்தில் படைப்புழுத் தாக்குதல் இருந்ததை அறிந்ததும் அரசே முன்வந்து இலவசமாக மருந்து தெளித்ததைக் குறிப்பிட்டார். அதிமுக அமைச்சர்களைச் சிறையில் அடைத்து விடுவதாக மு.க.ஸ்டாலின் கூறியதைச் சுட்டிக்காட்டியதுடன், அதிமுக தொண்டனைக் கூட தொட்டுப் பார்க்க முடியாது எனச் சூளுரைத்தார். 

கோவில்பட்டியில் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் தெருவில் நடந்து சென்று பொதுமக்களிடம் வாக்குச் சேகரித்தார். அப்போது அங்குள்ள தேநீர்க் கடைக்குச் சென்று அங்கிருந்தோருக்குத் துண்டுப் பிரசுரங்களை வழங்கினார். கடையில் தேநீர் வாங்கி அருந்திய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தேநீர் நன்றாக இருந்ததாகக் கடைக்காரருக்குப் பாராட்டுத் தெரிவித்தார்.

கோவில்பட்டியில் உள்ள மண்டபத்தில் சிறுகுறு வணிகர்களுடன் கலந்துரையாடிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக அரசு வணிகர்களின் பாதுகாவலராகத் திகழ்வதாகத் தெரிவித்தார். சிறுகுறு வணிகர்களின் தயாரிப்புகளைப் பார்வையிட்டார். அப்போது வணிகர்கள் அவருக்கு வழங்கிய கடலைமிட்டாயைச் சுவைத்துப் பார்த்துவிட்டுப் பாராட்டினார்.

அதிமுக தகவல்தொழில்நுட்ப அணி நிர்வாகிகளிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக அரசின் சாதனைகளைச் சமூக வலைத்தளங்களின் வழியே மக்களிடம் கொண்டுசேர்க்கும்படி கேட்டுக்கொண்டார்.

கோவில்பட்டியில் இருந்து எட்டயபுரத்துக்குச் செல்லும் வழியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெற்குத் திட்டங்குளத்தில் ராணுவ வீரர் கருப்பசாமியின் வீட்டுக்குச் சென்றார். அங்குக் கருப்பசாமியின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்ததுடன் அவர் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். அவர்களது கோரிக்கை மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். லடாக்கில் நவம்பரில் நேர்ந்த விபத்தில் கருப்பசாமி உயிரிழந்ததும், அவர் குடும்பத்துக்குத் தமிழக அரசு சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டதும் குறிப்பிடத் தக்கது. 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments