கணவனை கொன்று புதைத்த மனைவி.. வெளியேவந்த சடலத்தின் கை..!

0 99525

சிதம்பரம் அருகே வேலங்கிராயன் பேட்டை கடற்கரை பகுதியில் கொலை செய்து புதைக்கப்பட்ட சடலத்தின் கைகள் வெளியேவந்த நிலையில் கொலை தொடர்பாக மனைவி உள்ளிட்ட 6 பேரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்...

சிதம்பரம் அருகே உள்ள வேலங்கிராயன்பேட்டை கிராமத்தில் கடந்த 30ந் தேதி சடலம் ஒன்றின் கை மட்டும் வெளியே தெரிந்ததை பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சடலத்தை கைப்பற்றிய புதுச்சத்திரம் போலீசார் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

புவனகிரி தாசில்தார் சுமதி முன்னிலையில் சடலத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்ட போது, கொலை செய்து புதைக்கப்பட்டது சேத்தியாத்தோப்பு அருகே உள்ள பெரியநற்குணம் கிராமத்தைச் சேர்ந்த மினிவேன் ஓட்டுனரான ஆசை என்கிற சத்யராஜ் என்பது தெரிய வந்தது. மேலும் இவரை கடந்த 17ஆம் தேதி முதல் காணவில்லை என இவரது மனைவி தீபா கடந்த 21ஆம் தேதி சேத்தியாத்தோப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

காவல்துறையினரின் விசாரணையில் சத்தியராஜை, அவரது மனைவி தீபாவே காதலன் ஐயப்பனுடன் சேர்ந்து கூலிப்படையை ஏவி கொன்றது அம்பலமானது.

கொலையான சத்தியராஜும், ஐயப்பனும் நண்பர்கள். அந்த பழக்கத்தில் அடிக்கடி வீட்டுக்கு வந்து செல்லும் ஐயப்பனுக்கும் சத்யராஜ் மனைவி தீபாவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பழக்கம் நெருக்கமானதை அறிந்து சத்யராஜ் இருவரையும் எச்சரித்து உள்ளார். அதனால் சத்யராஜ் உயிரோடு இருந்தால் நிம்மதியாக இருக்கமுடியாது என நினைத்து தீபா ஐயப்பன் ஆகியோர் கூலிப்படையை ஏவி சத்யராஜை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளனர்.

அதன்படி கடந்த 17ஆம் தேதி அவரை சேத்தியாத்தோப்பு அருகே உள்ள சாத்தமங்கலம் மதுக்கடைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் போதையில் தள்ளாடிய அவரை அருகிலுள்ள வாழைத் தோப்புக்குள் அழைத்துச் சென்று சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளனர். பின்னர் அவரது சடலத்தை அங்கேயே புதைக்க ஏற்பாடு செய்தபோது மழையால் தண்ணீர் அதிகமாக இருந்ததால் புதைக்க இயலவில்லை.

இதையடுத்து ஐயப்பன் சொகுசு காரை எடுத்து வந்து அதில் சத்யராஜ் உடலை ஏற்றி பரங்கிப்பேட்டை அருகே உள்ள வேலங்கிராயப்பேட்டை கடற்கரை பகுதிக்கு எடுத்து வந்து மணலில் புதைத்து உள்ளனர். சில நாள் கழித்து மீண்டும் சடலம் புதைத்த இடத்தில் சென்று பார்த்தபோது அந்த இடத்தில் சடலம் மேலே வருவது போல் இருந்தது. பின்னர் நர்சரி கார்டன் சென்று புல் வாங்கி வந்து சடலத்தின் மேல் வைத்துள்ளனர். அதனையும் மீறி சடலத்தின் கைகள் வெளியே தெரிந்ததால் கொலையாளிகள் சிக்கிக் கொண்டது தெரியவந்தது.

தீபா, காதலன் ஐயப்பன் கூலிப்படையை சேர்ந்த அராத்து என்கிற வினோத், அருண் , கார்த்தி மற்றும் விருத்தாசலம் பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

தீதும் நன்றும் பிறர்தரவாரா என்ற பழமொழிக்கு ஏற்ப, கணவன் குழந்தை இருக்க, கெட்டவனை காதலனாக்கியதால், கணவனை கொலை செய்த மனைவி என்ற பழியோடு கூலிப்படையுடன் ஜெயிலில் கம்பி எண்ணும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் தீபா..! என்கின்றனர் காவல்துறையினர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments