அனைவருக்கும் ஏற்ற அதிமுக அரசு.! கூட்டணி கட்சிகளுக்கு அறிவுறுத்தல்.!

0 2204
அனைவருக்கும் ஏற்ற அதிமுக அரசு.! கூட்டணி கட்சிகளுக்கு அறிவுறுத்தல்.!

விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள் என அனைத்து தரப்பினருக்கும் உகந்த அரசாக, ஆளும் அதிமுக அரசு விளங்குவதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கூட்டணியில் இருப்பதால், எந்தவொரு கட்சியும் அதிமுக மீது ஆளுமை செலுத்த முடியாது என்றும், முதலமைச்சர் உறுதிபடக் கூறியுள்ளார். 

இராமநாதபுரம் மாவட்டத்தில், பரமக்குடி, இராமநாதபுரம், திருவாடானை, முதுகுளத்தூர் ஆகிய தொகுதிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். இந்த வகையில், பரமகுடி தொகுதிக்கு உட்பட்ட பார்த்திபனூரில், கால்நடை வளர்ப்போர் சங்கப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார். அப்போது பேசிய முதலமைச்சர், 14 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டிலான, காவிரி - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு டெண்டர் விடப்பட்டுள்ளதாகவும் விரைவில் அடிக்கல் நாட்டப்பட உள்ளதாகத் தெரிவித்தார்.

பரமக்குடியில் நெசவாளர்கள், விவசாயிகள், வணிகர்கள், பல்வேறு சமுதாயங்களின் பெரியவர்கள் உள்ளிட்டோரை சந்தித்து, முதலமைச்சர் ஆதரவு கோரினார். பரமக்குடியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், தேவேந்திரர் சமுதாய மக்களிடையே உள்ள பிரிவுகளை ஒன்றிணைத்துத் தேவேந்திர குல வேளாளர் என அறிவிக்க பரிந்துரைத்துள்ளதாகத் தெரிவித்தார். 

பட்டணம்காத்தானில் மகளிர் சுய உதவி குழுவினருடன் கலந்துரையாடி முதலமைச்சர், இராமநாதபுரம் பாரதி நகரில் சமுதாயத் தலைவர்களை சந்தித்து, அதிமுகவுக்கு ஆதரவு கோரினார். 

இராமநாதபுரத்தில் ஜமாத் தலைவர்கள் உடனான கலந்துரையாடலில் பங்கேற்ற முதலமைச்சர், ஆளும் அதிமுக அரசு இஸ்லாமியப் பெருமக்களுக்குப் பாதுகாப்பு அரணாக விளங்குவதாகத் தெரிவித்தார். இராமநாதபுரம் வாணி அருகே, அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையினரோடு கலந்துரையாடிய முதலமைச்சர், கீழக்கரையில், மீனவர்களையும், மீனவ சங்க பிரதிநிதிகளை சந்தித்து, அதிமுகவுக்கு ஆதரவு திரட்டினார். 

கடலாடியில் மரக்கறி உற்பத்தியாளர்களிடம் கலந்தாலோசனை நடத்திய முதலமைச்சர், தேவர் திருமகனாருக்கு தங்கக்கவசம் அணிவித்தவர் ஜெயலலிதா என்பதை சுட்டிக்காட்டி ஆதரவு கோரினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments