உள்நாட்டு தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசி.! அவசரத் தேவைக்கு பயன்படுத்த அனுமதி?

முழுக்க, முழுக்க உள்நாட்டு தயாரிப்பான "கோவாக்சின்" கொரோனா தடுப்பூசியை, அவசர கால மருத்துவப் பயன்பாட்டுக்கு அனுமதிக்கலாம் என, மத்திய அரசுக்கு, இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு பரிந்துரைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஐதாராபாத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் பாரத் பயோடெக் மருந்து தயாரிப்பு நிறுவனமும், ஐசிஎம்ஆர் மற்றும் தேசிய வைரலாஜி நிறுவனம் ஆகியவை இணைந்து, கொரோனா தடுப்பூசி ஒன்றை கண்டறிந்துள்ளன. முழுக்க, முழுக்க உள்நாட்டு தயாரிப்பான இந்த கொரோனா தடுப்பூசிக்கு, கோவாக்சின் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
கோவாக்சின் தடுப்பூசி, சென்னை உட்பட 20க்கும் மேற்பட்ட நகரங்களில், பல கட்டங்களாக பரிசோதிக்கப்பட்டது. கடந்த நவம்பர் மாதம் 28ஆம் தேதி, ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனத்திற்குச் சென்று பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி, கோவாக்சின் தடுப்பூசி தயாரிப்பு முறைகள் குறித்தும், பரிசோதனைகள் பற்றியும் கேட்டறிந்ததோடு ஆலோசனையும் மேற்கொண்டார்.
இந்நிலையில், கோவாக்சின் தடுப்பூசியை தயாரித்துள்ள பாரத் பயோடெக் நிறுவனம், அவசரகால மருத்துவப் பயன்பாட்டுக்கு அனுமதிக்க வேண்டி, இந்திய மருந்துத் தரக் கட்டுப்பாட்டு அமைப்பிடம் விண்ணப்பித்தது. இதனை பரிசீலித்துள்ள இந்திய மருந்துத் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு, அவசர கால பயன்பாட்டுக்கு, கோவாக்சின் கொரோனா தடுப்பூசியைப் பயன்படுத்த ஒப்புதல் வழங்கலாம் என, மத்திய அரசுக்குப் பரிந்துரைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே, அவசரகால மருத்துத் தேவைக்கு பயன்படுத்த, இந்திய-இங்கிலாந்து தயாரிப்பான கோவிஷீல்டு தடுப்பூசி பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில், முழுக்க, முழுக்க உள்நாட்டுத் தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசிக்கும், மத்திய அரசு, ஒப்புதல் வழங்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments