கொரோனா ஹாட்ஸ்பாட் ஆனது ITC Grand Chola... அபராதம் விதித்து வழக்குப் பதிவு செய்தது மாநகராட்சி!

0 20199

சென்னை கிண்டியில் உள்ள ஐ.டி.சி கிராண்ட் சோழா நட்சத்திர ஹோட்டலில் சமையல் கலைஞர்கள், ஊழியர்கள் என மொத்தம் 85 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, ஜனவரி 10 - ம்தேதி வரை அங்கு நிகழ்ச்சிகள் நடத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. புதிய கொரோனா ஹாட்ஸ்பாட்டாக மாறியுள்ள ITC Grand Chola ஹோட்டல் நிர்வாகத்துக்கு அபராதம் விதித்துள்ள மாநகராட்சி அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா நோய் பரவல் வெகுவாகக் குறைந்துவரும் நிலையில், தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. கிட்டத்தட்ட இயல்பு நிலை திரும்பியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இந்த சூழலில், இங்கிலாந்திலிருந்து மரபியல் மாற்றமடைந்த புதுவகை கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதிலிருந்து தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கொரோனா நோய்த் தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில், சென்னை ஐஐடியில் கொரோனா நோய் பரவல் அதிகரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, தற்போது சென்னை கிண்டியில் இயங்கிவரும் பிரபல நட்சத்திர ஹோட்டலான ஐ.டி.சி கிராண்ட் சோழா கொரொனா ஹாட்ஸ்பாட்டாக மாறியுள்ளது.

ஐ.டி.சி. கிராண்ட் சோழா ஹோட்டலில் 600 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வரும் சூழலில் தற்போது வரை 85 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள சூழலில், அவர்களின் குடும்பத்தினருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, ஐ.டி.சி. ஹோட்டல் அமைந்துள்ள சின்னமலை, வெங்கடாபுரம் ஆகிய பகுதிகளில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, “கொரோனா ஹாட்ஸ்பாட்டாக மாறியுள்ள ஐ.டி.சி கிராண்ட் சோழா ஹோட்டலில் ஜனவரி 10 - ம் தேதி வரை எந்தவித நிகழ்ச்சியும் நடத்தக்கூடாது. நோய் பரவலுக்குக் காரணமாக இருந்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும்” என்று அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பால், ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் ஐ.டி.சி ஹோட்டலைத் தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவந்துள்ளனர். மேலும், ஹோட்டலில் தங்கியவர்கள் பற்றிய தகவல்களையும் சேகரித்து கொரோனா பரிசோதனை நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நோய்த் தொற்றைப் பரப்பும் வகையில் செயல்பட்டதாகத் தொற்றுநோய் தடுப்பு சட்டத்தின் கீழ் ஐ.டி.சி.நிர்வாகம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னையில் உள்ள மற்ற நட்சத்திர ஓட்டல்களில் பணியாற்றும் ஊழியர்கள் மட்டுமல்லாமல் அங்குத் தங்கியிருப்பவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

கொரோனா நோய் பரவல் வெகுவாகக் குறைந்துவரும் நிலையில், ITC Grand Chola ஹோட்டல் புதிய கொரோனா ஹாட்ஸ்பாட்டாக மாறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments