தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை தொடங்கியது

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் 17 இடங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடத்தப்பட்டது.
சென்னை, நெல்லை, நீலகிரி, கோவை, திருவள்ளூர் ஆகிய 5 மாவட்டங்களில், சுமார் 2 மணி நேரம் ஒத்திகை நடைபெற்றது. பயனாளிகளை எப்படி கையாள்வது, தடுப்பூசியை பொதுமக்களுக்கு செலுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் என்னென்ன, தடுப்பூசிகளை சேமித்து வைக்கும் முறை உள்ளிட்டவை குறித்து சரிபார்க்கப்பட்டது.
2 மணி நேரத்தில் 25 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இந்த ஒத்திகை நிகழ்ச்சியின் மூலம் கால விரயமில்லாமல் குறித்த நேரத்தில் பணிகளை மேற்கொள்ள முடிகிறதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
பயனாளிகள் முகக் கவசம் அணிந்துள்ளனரா என்பதை உறுதி செய்து, அணியாதவர்களுக்கு முகக்கவசம் வழங்கி, கைகளில் கிருமி நாசினி தெளித்தபின் பின், உடல் வெப்பப் பரிசோதனை செய்து, கோவின் செயலி உதவியுடன் பயனாளிகளின் சுய விவரங்களை பதிவு செய்து அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும்.
தடுப்பூசி செலுத்தப்பட்ட பயனாளிகள் கண்காணிப்பு அறையில் 30 நிமிடங்கள் அமரவைக்கப்பட்டு முழு கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள். பின்னர் அவர்களுக்கு முழு உடற்பரிசோதனை செய்து உடலளவில் அவர்களுக்கு மாற்றம் ஏதும் ஏற்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து பிரச்சனை ஏதும் இல்லாத பட்சத்தில் அவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். இந்த வழிமுறைகள் ஒத்திகை நிகழ்ச்சி மூலம் சரிபார்க்கப்பட்டன.
Comments