கேக் இல்லை என்று கூறிய பேக்கரி உரிமையாளருக்கும் ஊழியருக்கும் சரமாரி அடி.. போதை கும்பல் அட்டூழியம்
சென்னை தாம்பரம் அடுத்த இரும்புலியூரில் இரவு கடை மூடும் நேரத்தில் வந்து பொருட்கள் கேட்டு கொடுக்காத ஆத்திரத்தில் பேக்கரி உரிமையாளரை தாக்கிய ஒரு கும்பல், காலை வந்து பேக்கரி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு சென்றுள்ளது.
முருகன் என்பவர் நடத்தி வரும் அந்த பேக்கரிக்கு நேற்றிரவு 10.19 மணியளவில் ஒரு போதை கும்பல் வந்து கேக் வேண்டும் என கேட்டுள்ளனர்.
கடையை மூடுவதில் மும்முரமாக இருந்த முருகன், கேக் இல்லை என்றும் காலை வந்து வாங்கிக் கொள்ளுமாறும் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல், முருகனையும் உடன் இருந்த மற்றொரு ஊழியரையும் சரமாரியாகத் தாக்கத் தொடங்கியுள்ளது.
அவர்களிடமிருந்து தப்பித்தோம் பிழைத்தோம் என முருகனும் கடை ஊழியரும் கடைக்குள் சென்று ஷட்டரை சாத்திவிட்டு போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். போலீசார் தங்களைத் தேடுவதை அறிந்த கும்பல், காலை ஆறரை மணியளவில் வந்து பேக்கரி ஷட்டருக்குள் பெட்ரோலை ஊற்றி பற்றவைத்துச் சென்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக 4 பேரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Comments