புத்தாண்டை முன்னிட்டு, கோவில்களில் சிறப்பு வழிபாடு..!

புத்தாண்டை முன்னிட்டு, சென்னை, மதுரை, பிள்ளையார்பட்டி உள்ளிட்ட இடங்களில் அதிகாலையிலேயே ஏராளமானோர் கோவில்களுக்குச் சென்று குடும்பத்தினருடன் வழிபட்டனர்.
சென்னை தியாகராயர்நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தானம் கோயிலில் அதிகாலையிலேயே திரளான மக்கள் நீண்ட வரிசையில் நின்று பெருமாளை வழிபட்டனர். முன்னதாக புத்தாண்டை முன்னிட்டு இந்த ஆலயம் முழுவதும் பல வண்ண மலர்களாலும், விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
சென்னை வடபழனியிலுள்ள முருகன் கோயிலில், ஆங்கில புத்தாண்டையொட்டி சந்தனப்பூச்சு , நாணய அலங்காரத்துடன் பக்தர்களுக்கு முருகப்பெருமான் காட்சி அளித்தார். கோயிலில் அதிகாலை 5 மணி முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.2021ம் ஆண்டு வளமும் , நலமும் நிறைந்த ஆண்டாக அமைய அரோகரா என பக்திக் கோசம் எழுப்பி பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.
சென்னை மயிலாப்பூர் லஸ்கார்னர் பகுதியில் உள்ள நவசக்தி விநாயகர் கோவிலில் பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அபிஷேக நிகழ்ச்சியில் பொதுமக்கள் கலந்து கொள்ள அனுமதி அளிக்கவில்லை.
புத்தாண்டு பிறந்ததை ஒட்டி, சென்னை சாந்தோம் தேவாலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில், கிறிஸ்தவர்கள் முகக்கவசம் அணிந்து தனிநபர் இடைவெளியுடன் பங்கேற்றனர். ஒருவருக்கொருவருவர் மகிழ்ச்சியாக புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலில் அதிகாலை 5 மணி முதல் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சுவாமி மற்றும் அம்பாளை வழிபட்டு வருகின்றனர். பக்தர்கள் மலர் மாலை செலுத்தவும் , கருவறையினுள் அர்ச்சனைக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு என்பதால் இரவு 8 மணி வரை நடை திறக்கப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் அதிகாலையிலேயே சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. புத்தாடைகள் அணிந்து குடும்பத்துடன் வந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரி பாலசுப்பிரமணியர் சுவாமி கோயிலில் அதிகாலை முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். வழக்கமாக கூட்டம் அதிகமாக இருக்கும் நிலையில், கொரோன அச்சம் காரணமாக இன்று குறைவாகவே இருந்தது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் கிருமி நாசினி மூலம் கைகளை சுத்தம் செய்யவும், சமூக இடைவெளியுடன் தரிசனம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில், திரளானோர் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளின் படி பொது மக்கள் முக கவசம் அணிந்தும். தனிமனித இடைவெளியை கடைப்பிடித்தும் சுவாமியை தரிசித்தனர்.
மதுரை
உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு காலை 5 மணி முதல் ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கு ஒரு முறை சிறப்பு காலச்சந்தி பூஜை நடைபெற்று வருகிறது.
இதேபோல் இம்மையிலும் நன்மை தருவார் கோயில், கூடழலகர் பெருமாள் கோயில், தல்லாகுளம் பெருமாள் கோயில், மாநகராட்சி பூங்கா முருகன் கோயில், நேதாஜி சாலை தண்டபாணி சுவாமி கோயில், நரசிங்கம் யோக நரசிங்கப் பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் பக்தர்கள் திரளாக சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் புத்தாண்டை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர். கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை கடைபிடித்த படி பக்தர்கள் நீண்ட வரிசையில் தரிசனத்திற்காக அதிகாலை முதல் காத்திருந்தனர்.
மதுரை திருப்பரங்குன்றத்தில் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
புதுச்சேரி
புத்தாண்டை வரவேற்கும் வகையில் புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் விடியற்காலை முதல் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் விநாயகரை வழிபட்டனர்.
திருச்சி
திருச்சி மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் கோயிலில் புத்தாண்டை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் உள்ள பழமையான சங்கரராமேஸ்வரர் சிவன் கோயிலில் ஆங்கில புத்தாண்டையொட்டி அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கோயிலில் அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கொரோனா பரவல் காரணமாக 2020ம் ஆண்டில் பெரும் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், 2021ம் ஆண்டு மகிழ்ச்சியோடும் செல்வ செழிப்போடும் அமைய வேண்டி பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் உள்ள பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும் திகழும் அருணாசலேஸ்வரர் கோயிலில் புத்தாண்டை முன்னிட்டு அதிகாலை 3.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு சுவாமி மற்றும் உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதையடுத்து ராஜகோபுரம் வழியாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்து வருகின்றனர்.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் அத்திவரதர் கோவிலில் வடகலை, தென்கலை, பிரிவினரிடையே வாக்குவாதம், லேசான கைகலப்பு ஏற்பட்டது. மார்கழி மாதம் இராப்பத்து உற்சவத்தின் ஏழாவது நாளான இன்று கோவிலுக்குள்ளேயே சாமி உள் புறப்பாடு நடைபெற்றது. அப்பொழுது வடகலை பிரிவினரை தென்கலை பிரிவினர் தடுத்து நிறுத்தி தள்ளியதால் கைகலப்பு ஏற்படும் சூழல் உருவானது. பெருமாளின் முன்பு முதலில் வடமொழியில் வேதபாராயணம் செய்வதா, தமிழில் பாசுரங்களை பாடுவதா என்பது தொடர்பான கருத்து வேறுபாட்டில் இந்த மோதல் உருவானது.
வரதராஜ பெருமாள் கோவிலில் முக்கிய உற்சவங்களின் போது தொடர்ந்து வடகலை மற்றும் தென்கலை பிரிவினர் இடையே மோதல் போக்கு ஏற்பட்டு வருவதால் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
சேலம்
சேலம் ராஜகணபதி கோயில், ஸ்ரீ அழகிரிநாத சாமி கோயில், கோட்டை பெரிய மாரியம்மன் உள்ளிட்ட கோயில்களிலும், பட்டை கோவில் பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் ஆலயம், சிங்கத்தை பகுதியில் உள்ள வரதராஜ சுவாமி ஆலயம் ஆகிய கோயில்களிலும் ஆங்கில புத்தாண்டையொட்டி இன்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
திருச்சி
திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சாமி கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், உறையூர் வெக்காளியம்மன் கோயில் மற்றும் திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயில் ஆகிய கோயில்களில் ஆங்கில புத்தாண்டையொட்டி இன்று காலை முதலே கூட்டம் அலைமோதியது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
திண்டுக்கல்
திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் மூலவருக்கு திருப்பள்ளிஎழுச்சி, சிறப்புஅபிஷேக பூஜைகள் நடைபெற்றன. அதிகாலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலின் அடிவாரத்தில் திரண்டனர். இதனால் கோயிலுக்கு செல்ல பயன்படும் ரோப்கார், வீன்ச் நிலையங்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது. மேலும் படிகள் மூலம் கோயிலுக்கு செல்லும் வழியில் இருக்கும் குடமுழுக்கு நினைவரங்கிலும், அடிவாரம் திருஆவினன்குடி கோயிலிலும் பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்தனர். மலை மீது வரும் பக்தர்கள் கைகளை சுத்தம் செய்ய சானிடைசர் வசதி செய்து தரப்பட்டு இருந்தது. பக்தர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
நாமக்கல்
நாமக்கல் கோட்டை சாலையில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயிலில் உள்ள 18 அடி உயர ஆஞ்சநேயர் சிலைக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தங்க கவசம் சாத்தப்பட்டிருந்தது. புத்தாண்டையொட்டி காலை முதலே பக்தர்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் முகக்கவசம் அணிந்திருந்தது உறுதி செய்யப்பட்டு, உடல்வெப்ப பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர்.
முருகபெருமானின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றன. பிறகு 4 மணி முதல் பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடலில் புனித நீராடவும், குளிக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்ததால், கடற்கரை பகுதி வெறிச்சோடியிருந்தது. கோயிலில் கூட்டம் அலைமோதுவதால், சுமார் 3 மணி நேரம் பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.
தூத்துக்குடி
முருகபெருமானின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றன. பிறகு 4 மணி முதல் பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடலில் புனித நீராடவும், குளிக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்ததால், கடற்கரை பகுதி வெறிச்சோடியிருந்தது. கோயிலில் கூட்டம் அலைமோதுவதால், சுமார் 3 மணி நேரம் பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில், குமரக்கோட்டம் முருகன் கோயில், வரதராஜ பெருமாள் கோயில் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் புத்தாண்டையொட்டி சுவாமிக்கு இன்று சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன. மேலும் அனைத்து கோயில்களிலும் காலை முதலே கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. சமூக இடைவெளியுடனும், முகக்கவசம் அணிந்தும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
திருத்தணி
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அதிகாலையிலேயே மூலவர் முருகப்பெருமானுக்கு பால், பழம், பஞ்சாமிர்தம், தயிர், இளநீர், போன்ற பொருட்களில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து சந்தனகாப்பு, தங்கவேல், பச்சை மரகதக்கல் மாலை அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு சாமி காட்சி அளித்தார். உற்சவர் சண்முகநாதர் வள்ளி -தேவயானை தாயாருடன் சிறப்பு வெள்ளிக் கவச அலங்காரத்தில் வில்வ இலை தங்கமாலை அணிவிக்கப்பட்டு காட்சி அளித்தார்.
விழுப்புரம்
புத்தாண்டை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் ஜொலித்த அம்மனை ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
வடசென்னை
வடசென்னை ஸ்ரீ சீரடி சாய்பாபா திருகோயிலில் புத்தாண்டை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு ஆராதனையில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். சென்னை புதுவண்ணாரப்பேட்டை காமராஜர் சாலையில் அமைந்துள்ள இக்கோவிலில் ஆண்டுதோறும் புத்தாண்டு அன்று சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். திருவொற்றியூர், வண்ணாரப்பேட்டை இராயபுரம் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் வந்திருந்து சாய்பாபாவை தரிசனம் செய்து சென்றனர்.
Comments