கொரோனா தடுப்பூசிக்கு தயார் நிலை... நாடெங்கிலும் ஒத்திகை...

0 1936
கொரோனா தடுப்பூசிக்கு தயார் நிலை... நாடெங்கிலும் ஒத்திகை...

கொரோனா தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு முன்னெடுத்துள்ளது. வரும் புத்தாண்டில் நாட்டு மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்குமென பிரதமர் மோடி கூறியுள்ள நிலையில், ஜனவரி 2 ஆம் தேதி முதல் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசியை நாட்டு மக்களுக்கு போடும் பணிக்கான முன்னோட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கி உள்ளது. இதில் முதற்கட்டமாக 30 கோடி பேருக்கு தடுப்பூசி போடுவது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போடும் பணிக்காக முதலில் ஒத்திகை பார்க்க திட்டமிட்ட மத்திய அரசு, பஞ்சாப், குஜராத், அசாம், ஆந்திரபிரதேசம் ஆகிய நான்கு மாநிலங்களில் கடந்த 28, 29 ஆம் தேதிகளில் ஒத்திகை நிகழ்ச்சிகளை நடத்தியது. 

இதையடுத்து இப்போது அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தடுப்பூசி ஒத்திகை ஜனவரி 2 ஆம் தேதி நடைபெறுமென மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் அறிவித்துள்ளார். இதற்காக அவர் இன்று அனைத்து மாநில சுகாதாரத்துறை செயலாளர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை மேற்கொண்டார். இதன் பின்னர் அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஜனவரி 2 ஆம் தேதி அன்று அனைத்து மாநில தலைநகரங்களிலும் குறைந்த து 3 இடங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறும் என்று கூறியுள்ளார். சில மாநிலங்களில் மலைபிரதேசங்கள் உள்ளிட்ட இடங்களிலும் ஒத்திகைக்கு ஏற்பாடு செய்யப்படுமென்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொருட்களை கொண்டு செல்வதில் சவால் நிலவும் இடங்களில் ஒத்திகை நடத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா தடுப்பூசி போடுவதற்காக அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்ய மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.மேலும் தடுப்பூசி மருந்தை செலுத்த 83 கோடி ஊசிகள் வாங்க உள்ளதாகவும், 35 கோடி ஊசிகள் வாங்க ஒப்பந்த புள்ளிகள் கோரி உள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதனிடையே சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன்,ஜனவரி 2 ஆம் தேதி தமிழகத்திலும் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறும் என்றார். 

இந்நிலையில் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு காணொலி மூலம் அடிக்கல் நாட்டி பேசிய பிரதமர் மோடி, உலக சுகாதாரத்தின் மையப்புள்ளியாக நாடு உருவெடுத்து உள்ளது என்றார். வரும் புத்தாண்டில் சுகாதாரத்துறையில் இந்தியா மேலும் வலிமை பெறும் என்ற அவர், புத்தாண்டில் நாட்டு மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடைபெறும் என்று அறிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments