புத்தாண்டுக்கு தயாராகும் புதுச்சேரி... முதலமைச்சர் நாராயணசாமி நேரில் ஆய்வு

தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் புதுச்சேரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக புதுச்சேரி கடற்கரை சாலை 10 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. கடற்கரை சாலை மற்றும் விட்டோம் பகுதிகளில் இன்று பிற்பகலில் இருந்து நாளை காலை வரை வாகன போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது. கடற்கரைக்கு கொண்டாட்டங்களுக்கு வரும் பொதுமக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்த பழைய துறைமுகம் மற்றும் சர்க்கரை ஆலை பகுதிகளில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கடற்கரை சாலை முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், ஒவ்வொரு 20 மீட்டர் தூர இடைவெளியில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். புதுச்சேரி முழுவதும் 2ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் களமிறங்கவுள்ளனர்.
மதுபான கடைகள் 11 மணி வரை திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அனைத்து ரிசார்ட்ஸ் மற்றும் ஹோட்டல்கள் 1 மணி வரை திறந்திருக்கலாம். அதேசமயம், நட்சத்திர விடுதிகள், மதுபான பார்களில் கேளிக்கை நடனங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கடற்கரை சாலையில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகளை முதலமைச்சர் நாராயணசாமி, நேரில் சென்று ஆய்வு செய்தார்.
Comments