சென்னையில் கடற்கரை, விடுதிகள் மற்றும் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட தடை... கண்காணிப்பு ஏற்பாடுகள் தீவிரம்

கடற்கரை, விடுதிகள் மற்றும் பொதுஇடங்களில் திரளாகக் கூடி புத்தாண்டு கொண்டாட தடை விதிகப்பட்டுள்ள நிலையில், மேம்பாலங்கள் மூடல், 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணி, 300 இடங்களில் சோதனை சாவடி என சென்னையில் கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளன.
புத்தாண்டு என்றாலே 31-ந் தேதி மாலையிலிருந்தே மெரீனா, எலியட்ஸ் கடற்கரைகளும், கிழக்கு கடற்கரை சாலையின் கேளிக்கை விடுதிகளும் களைகட்டத் தொடங்கும். இம்முறை கடற்கரையிலும், விடுதிகளிலும் கொண்டாட்டங்கள் கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னையில் நட்சத்திர விடுதிகள், கேளிக்கை விடுதிகளில் உள்ள மதுபான கூடங்களை இரவு 10-க்கு மூட வேண்டும் என உத்தரவிட்டுள்ள போலீசார், அனைத்து விதமான உணவகங்களும் இன்று இரவு 10 மணிக்கு மேல் செயல்பட தடை விதித்துள்ளனர்.
கடற்கரை நெடுகிலும் இன்று மாலை முதல் நாளை இரவு வரை பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மெரினா காமராஜர் சாலை காந்தி சிலை அருகே வழக்கமான பொதுமக்கள் கூடுகை, கொண்டாட்டங்கள் இல்லை என்றாலும் அங்குள்ள "டவர் கடிகாரம்" மலர்களாலும், மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு வருகிறது. பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரைக்கு வரும் சாலைகளில் 16 இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
கட்டுப்பாடுகள் முறையாகக் கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்கவும், பாதுகாப்பு வழங்கவும் சென்னை மாநகர் முழுவதும் புத்தாண்டு இரவு 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். சென்னையில் அனைத்து மேம்பாலங்களும் மூடப்பட்டு, 300 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர். தடை உத்தரவை மீறி நட்சத்திர விடுதிகள், கேளிக்கை விடுதிகள், பீச் ரிசார்ட்டுகளில் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை காவல் துறை எச்சரித்துள்ளது.
Comments