தமிழகத்தில் பரவலாக மழை...!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
தஞ்சாவூர்:
தஞ்சையில் அதிகாலை முதலே கனமழை பெய்து வருகிறது. ஐயன் கடைத்தெரு, வடக்கு வீதி, மேல வீதி உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்தது.ஆங்காங்கே பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் மூடப்படாமல் இருப்பதால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
சேலம்:
சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் காலை முதலே விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது. நான்கு ரோடு பகுதியில் இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் சாலையில் வழுக்கி விழுந்து நூலிழையில் உயிர் தப்பினார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர்மாவட்டத்தில் இரவு முதலே கருமேகங்கள் சூழ விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே சென்றனர்.
இதனிடையே, கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாகை மாவட்டம் கொள்ளிடத்தில் 9 செண்டி மீட்டர் மழையும், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் 7 செண்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
கோவை:
கோவை மாநகர் மற்றும் புறநகரின் பல்வேறு பகுதிகளில் 4 மணி நேரத்திற்கும் மேலாக மிதமான மழை பெய்து வருகிறது.
திருப்பூர்:
திருப்பூர் மாநகரில் காலை முதலே கனமழை பெய்து வருகிறது. 2 நாட்களாக அங்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில், காலை முதல் தாராபுரம் சாலை, பல்லடம் சாலை, அவினாசி சாலை, காங்கேயம் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது. சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.
நாகை:
நாகை மாவட்டத்தில் நேற்றிரவு முதல் விட்டு விட்டு பரவலாக மழை பெய்து வருகிறது. தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக பால் கட்டும் பருவத்திலுள்ள நெற்கதிர்கள் பாதிக்கப்படக்கூடும் என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
Comments