கூடங்குளத்தில் போலீஸ் அக்கா திருட்டு வேலை..! 3 பைக் - செல்போன் அபேஸ்

0 24982
கூடங்குளத்தில் போலீஸ் அக்கா திருட்டு வேலை..! 3 பைக் - செல்போன் அபேஸ்

கூடங்குளம் காவல் நிலையத்தில் இரவுப் பணியில் இருந்த பெண் காவலர் ஒருவர், சக காவலர்கள் உறங்கிய பின்னர் தனது கணவரை வரவழைத்து, பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்களை திருடிக்கொடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஊருல எங்கே திருடு போனாலும் காவல் நிலையத்தில் புகார் செய்யலாம்... காவல் நிலையத்திலேயே திருடுபோனா....யாருகிட்ட போய் புகார் கொடுப்பாங்க ? இப்படி ஒரு தர்மசங்கடமான சூழ்நிலையை காவல் துறைக்கு எற்படுத்திய கூடங்குளம் பெண் காவலர் கிரேசியா இவர்தான்..!

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் உட்கோட்டம் கூடங்குளம் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட இரு சக்கர வாகனங்கள் அவ்வபோது திருட்டுப் போவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணனிடம் புகார் அளிக்கப்பட்டது. அவரது உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து வாகன திருட்டில் ஈடுபட்டவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

முதற்கட்ட விசாரணையில், இரு சக்கர வாகனங்கள் திருடப்பட்ட தினங்களில் இரவுப் பணியில் பாராவாக இருந்தவர் இரண்டாம் நிலை பெண் காவலரான கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த கிரேசியா என்பது தெரியவந்தது. இவரிடம் நடத்திய விசாரணையில் இரவுப் பணியில் உள்ள போலீசாரை தூங்கவைத்து திருட்டு சம்பவத்தை அரங்கேற்றியது அமபலமானது.

காவல் நிலையத்தில் இரவுப் பணியில் இருக்கும் போது கிரேசியா, தனது கணவர் அன்புமணியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு காவல் நிலையம் வரவழைத்து பல்வேறு வழக்குகளில் கைப்பற்றப்பட்டு காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 3 இரு சக்கர வாகனங்களை திருடிக்கொடுத்தது தெரியவந்தது.

காவல் நிலையத்தில் இருந்து ஒரு மொபைல் போனையும் மற்றும் விசாரணை கைதியின் வெள்ளி அரைஞாண் கயிற்றையும் அவர் அபேஸ் செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பெண் காவலர் கிரேசியா, அவரது கணவர் அன்புமணி ஆகியோர் மீது திருட்டு வழக்குப் பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அவர்களிடம் இருந்து மூன்று இரு சக்கர வாகனங்களும் ஒரு மொபைல் போன் மற்றும் வெள்ளி அரைஞாண் கயிறு ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இரவுப் பணியில் உறங்கச் சென்ற காவலர்களின் பொறுப்பற்ற செயலை சாதகமாக்கிக்கொண்ட கிரேசியா போலீஸ் வேலைக்கு பதில் திருட்டு வேலையில் ஈடுபட்டதால் ஜெயிலில் கம்பி எண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments