”குட்டி யானை” பம்பர கழட்டுனா பலூன் விரியுமா ? ஆர்.டி.ஓ சொல்லும் காரணம்

0 12859
”குட்டி யானை” பம்பர கழட்டுனா பலூன் விரியுமா ? ஆர்.டி.ஓ சொல்லும் காரணம்

குட்டியானை என்று அழைக்கப்படும் சிறிய ரக சரக்கு வாகனங்களில், பாதுகாப்பு பலூன்கள் இல்லாத நிலையில், முன்பக்க பம்பரை கழற்றுவதற்கு வாகன ஓட்டிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சொகுசுக் கார்களுக்கு இணையாக குட்டியானையின் பம்பர்கள் கழற்றப்படும் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித் தொகுப்பு...

கார்களின் முன்பக்கத்தில் பொருத்தப்படும் பம்பர்களால் விபத்தின் போது அதிக உயிரிழப்பு ஏற்படுவதாகவும், அவற்றை தவிர்க்கும் பொருட்டு பம்பர்கள் பொருத்தத் தடை விதித்த மத்திய அரசு, மீறிப் பொருத்துவோருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் மற்றும் செலுத்தத் தவறினால் 6 மாத சிறைத் தண்டனை என்று கடந்த 2017 ஆம் ஆண்டு அறிவித்தது.

இந்த சட்டம் நடைமுறைக்கு வந்து 3 ஆண்டுகளாக பம்பர்களை கழற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், லெனின்பால் என்பவர் இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது, அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளின் வாகனங்களிலேயே தடைசெய்யப்பட்ட பம்பர் இருப்பதாக அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், உடனடி நடவடிக்கை எடுக்கத் தவறிய போக்குவரத்து அதிகாரிகளுக்கு கண்டனம் தெரிவித்தனர். இந்த வழக்கில் தலைமைச் செயலாளரை எதிர்மனுதாரராகச் சேர்த்து ஜனவரி 28ந்தேதி பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையடுத்து ஆழ்ந்த தூக்கத்தில் இருந்து எழுந்த போக்குவரத்து அதிகாரிகள், கடந்த சில தினங்களாக தமிழகம் முழுவதும் வாகனங்களை மறித்து பம்பர்களைக் கழற்றி வீசி வருகின்றனர்.

சொகுசுக் கார்களில் விபத்து ஏற்பட்டால் ஏர்பேக் எனப்படும் பாதுகாப்பு பலூன்கள் உரிய நேரத்தில் விரிந்து வாகன ஓட்டிகளின் உயிரை காத்துக் கொள்ளும். கார்களில் பம்பர்கள் பொருத்துவதால் அவை முறையாக விரிவதில்லை என்று அவற்றை நிறுத்தி அகற்றுவது சரியான நடவடிக்கையாகும். சிறியரக சரக்கு வாகனங்களில் ஏர்பேக் கிடையாது என்பதால், பம்பர் மட்டுமே குறைந்த பட்ச பாதுகாப்பாக உள்ள நிலையில் அவற்றை அகற்றுவதற்கும், 5 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிப்பதற்கும் சரக்குந்து ஓட்டுனர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்

ஆனால், சொகுசுக்கார்களை விட சரக்கு வாகனங்களில் தான், பம்பர்களால் அதிக விபத்துக்கள் நடப்பதாக விளக்கம் அளித்துள்ளனர் போக்குவரத்து அதிகாரிகள். பம்பர் வைத்திருக்கும் சரக்குந்து வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலான சாலைகளில் முண்டியடித்துச்சென்று மற்ற வாகனங்களின் மீது மோதி விபத்தை ஏற்படுத்துவதாக குற்றஞ்சாட்டுகின்றனர்.

குட்டியானை போன்ற வாகனங்களில் பொருத்தப்படும் பம்பர்கள், இரு சக்கர வாகனஓட்டிகள் மீது மோதினால் உயிரிழப்பை ஏற்படுத்துவதாகவும், ஓட்டுனர்களின் அதிவேகத்தால் பம்பர் தட்டி பாதசாரிகள் பலர் காயமடைந்துள்ளதாகவும், சிலர் உயிரிழந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர் போக்குவரத்து துறை அதிகாரிகள்.

அதோடல்லாமல் வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்ட வடிவில் வாகனத்தை விற்கும் நிலையில். அவற்றை வாங்கி ஓட்டும் சரக்குந்து ஓட்டுனர்களோ, அதிக பாரம் ஏற்ற வேண்டும் என்ற சுய நலத்தில் கூடுதலாக உயரத்தை கூட்டி கம்பித் தடுப்புகளையும் கொக்கி வளைவுகளையும் வைத்து வாகனத்தின் அளவை மாற்றி அமைத்து மற்ற வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.

சரக்குந்து ஓட்டுனர்கள் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிப்பதை குறை சொல்வதை விட்டு, முன் கூட்டியே வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள பம்பர்களை அகற்றி ஒத்துழைக்க வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர் போக்குவரத்துத் துறை அதிகாரிகள்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments