' நான்தான் சப் இன்ஸ்பெக்டர் ஜம்புலிங்கம் '- போலி உதவி ஆய்வாளருக்கு தர்ம அடி

கள்ளக்குறிச்சியில் கடந்த சில மாதங்களாகப் பகலில் பத்திரிக்கையாளர், இரவில் காவல் உதவி ஆய்வாளர் என்று சொல்லி, சாலையில் போவோர் வருவோரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட டிப் டாப் ஆசாமி ஒருவர் இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடம் சிக்கி தர்ம அடி வாங்கிய சம்பவம் நடந்துள்ளது.
கள்ளக்குறிச்சி அருகே உள்ள நீலமங்கலம் கிராமத்தில் டிப் டாப் ஆசாமி ஒருவர் சாலையில் வருவோரை வழிமறித்து அவர்களின் செல்போன், பணம், பர்ஸ் ஆகியவற்றைப் பிடுங்கி வழிப்பறியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
அவரிடம் யார் என்று விசாரித்தால் தான் வரஞ்சரம் காவல் நிலையத்தின் காவல் உதவி ஆய்வாளர் ஜம்புலிங்கம் என்று கூறியுள்ளார். உதவி ஆய்வாளர் என்பதால் அவரிடம் வம்பு வைத்துக்கொள்ளாமல் அவர் கேட்பதைக் கொடுத்துச் சென்றனர் மக்கள்.
இந்த நிலையில் வழக்கம் போல உதவி ஆய்வாளர் ஜம்புலிங்கம் பெயரைக் கூறி இளைஞர்கள் சிலரிடம் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளார் டிப்டாப் ஆசாமி. ஆனால், உதவி ஆய்வாளர் ஜம்புலிங்கம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்கெனவே பணியிட மாற்றம் செய்யப்பட்டு விட்டார் என்பதால் இளைஞர்களுக்கு டிப் டாப் ஆசாமி மீது சந்தேகம் எழுந்தது.
மேலும், நீலமங்கலம் கிராமப் பகுதி கள்ளக்குறிச்சி காவல் துறையினரின் கட்டுப்பாட்டில் வரும் பகுதி என்பதால், இங்கு வரஞ்சரம் போலீசாருக்கு என்ன வேலை என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
பதில் சொல்லத் தெரியாமல் டிப் டாப் ஆசாமி விழிக்கத் தொடங்கியுள்ளார். டிப் டாப் ஆசாமி காவல் உதவி ஆய்வாளர் இல்லை என்பதை உணர்ந்த இளைஞர்கள் அவரைப் பிடித்து விசாரித்து முட்டிப்போட வைத்து தர்ம அடி கொடுத்தனர். இதை வீடியோவாகப் பதிவிட்டு இளைஞர்கள் பரப்ப தற்போது இந்த வீடியோ தீயாகப் பரவி வருகிறது.
டிப் டாப் ஆசாமியிடம், “நாங்களே கூலி வேலை செய்து தினமும் கஷ்டப்பட்டு உழைத்து வருகிறோம். நீ எங்களிடம் தினமும் ரூ.100 , 200 வாங்குகிறாய்?” என்று சொல்லி கோபத்துடன் நையப்புடைத்தனர்.
இதற்கிடையே, இளைஞர்கள் அந்த டிப்டாப் ஆசாமியிடம் அடித்து விசாரித்த போது, அவர் அருகில் உள்ள விருகாவூர் கிராமத்தைச் சேர்ந்த துரை கார்த்திக் என்பது தெரிய வந்துள்ளது. அவர் பகலில் பத்திரிக்கை நிருபர், இரவில் காவல் உதவி ஆய்வாளர் என்று கூறி பலரை மிரட்டி பணம் பறித்து வந்துள்ளார். இளைஞர்களிடம் அடி வாங்கிய, அந்த டிப்டாப் ஆசாமி அங்கிருந்து சென்றுவிட்டார்.
போலி வேஷம் போட்டு பொதுமக்களை ஏமாற்றி மிரட்டி அவர்களின் உடைமைகளை சூறையாடும் டிப் டாப் ஆசாமியைப் பிடித்து சிறைக்கு அனுப்ப வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments