மு.க.ஸ்டாலின் கண்களுக்கு ஏழை மக்கள் தெரியமாட்டார்கள்.. தன் வீட்டு மக்கள் பற்றி மட்டுமே அவர் சிந்திப்பார் - முதலமைச்சர்

0 3355
திமுக தலைவர் ஸ்டாலினின் கண்களுக்கு ஏழை மக்கள் தெரியமாட்டார்கள் என்றும் ஏழை மக்களைப் பற்றி சிந்திக்காமல் தன் வீட்டு மக்கள் பற்றி மட்டுமே அவர் எப்போதும் சிந்திப்பார் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலினின் கண்களுக்கு ஏழை மக்கள் தெரியமாட்டார்கள் என்றும் ஏழை மக்களைப் பற்றி சிந்திக்காமல் தன் வீட்டு மக்கள் பற்றி மட்டுமே அவர் எப்போதும் சிந்திப்பார் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

வெற்றி நடை போடும் தமிழகம் என்கிற பெயரில் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேந்தமங்கலத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் மலைவாழ் மக்களை சந்தித்தார்.

பூர்ண கும்பம் மரியாதையோடு பாரம்பரிய மகாபாரத தெருக்கூத்து, ஆண்டிக் குளத்தான் ஆட்டம், தேர்வாய் ஆட்டம் ஆடி மலைவாழ் மக்கள் முதலமைச்சரை வரவேற்றனர்.

தொடர்ந்து மலைவாழ் மக்களுடன் கலந்துரையாடிய முதலமைச்சரிடம், தங்கள் பகுதியில் செல்போன் டவர் அமைக்க உதவ வேண்டும், மின்சார வசதி இல்லாத இடங்களில் சோலார் வசதி செய்து தர வேண்டும், காப்பி, மிளகு, கிராம்பு ஆகிய பயிர்களுக்கு அரசு அடிப்படை விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை மலைவாழ் மக்கள் முன்வைத்தனர்.

கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு படிப்படியாக நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் அவர்களிடம் தெரிவித்தார். கலைந்துரையாடலுக்கு பின் கொல்லிமலையில் விளையும் வாழைப்பழங்கள், அன்னாச்சி, தேன் உள்ளிட்டவற்றை மலை வாழ் மக்கள் முதலமைச்சருக்கு வழங்கினர்.

தொடர்ந்து திறந்தவெளி வாகனத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட முதலமைச்சர், சேந்தமங்கலம் பகுதியில் நிறைவேற்றப்பட்ட அரசின் நலத்திட்டங்களை பட்டியலிட்டார். தொடர்ந்து அதிமுக அரசு மக்களுக்கு செய்துள்ள நலத்திட்டங்கள் எல்லாம் திமுக தலைவர் ஸ்டாலினின் கண்களுக்கு தெரியாது என்றார். 

தொடர்ந்து திருச்சி தொட்டியம் மதுர காளியம்மன் கோவில் மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்தி கட்சியை உடைக்கும் முயற்சிகள் நடைபெறுவதாகவும் அவை வெற்றி பெறாது என்றும் கூறினார். அப்படி ஏற்கனவே நடைபெற்ற முயற்சிகள், அனைத்தும் தோல்வியில் முடிந்ததாகவும் முதலமைச்சர் கூறினார்.

தான் கடுமையாக உழைத்து படிப்படியாக முதலமைச்சர் பதவி வரை உயர்ந்துள்ளேன் என்று கூறிய முதலமைச்சர், கலைஞரின் மகன் என்கிற ஒரே காரணத்திற்காக திமுக தலைவராக்கப்பட்டவர் மு.க.ஸ்டாலின் என்றார். ஸ்டாலினுக்கு பொய்யை கூட ஒழுங்காக சொல்லத் தெரியவில்லை என்று கூறிய முதலமைச்சர், தேர்தலுக்காக வெளிமாநிலத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவர் கூறுவதை கேட்டு திமுக செயல்படுவதாகவும் சாடினார்.

கூட்டத்தில் பங்கேற்ற பின் தொட்டியம் பகுதியிலுள்ள வாழைத் தோப்பு ஒன்றுக்குச் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வாழை விவசாயிகளை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து மண்வெட்டி பிடித்து வாழை கன்று ஒன்றுக்கு மண்ணை அணைத்தார்.

அப்போது மாணவர்களின் சத்துணவு திட்டத்தில் வாழைப்பழத்தையும் சேர்க்க விவசாயிகள் கேட்டுக் கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments