சமுக நல ஆர்வலருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை.. சவூதி - அமெரிக்க உறவில் விரிசல்!

0 3233

அரசுக்கு எதிராக செயல்படுவதாக கூறி கைது செய்யப்பட்ட சமூக நல பெண் ஆர்வலர் ஒருவருக்கு சவூதி நீதிமன்றம் 6 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்துள்ளது உலக மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சவூதி அரேபியாவைச் சேர்ந்த் சமூக நல ஆர்வலர் லோஜெயின் அல்-ஹத்லோல். இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு சவூதியில் பெண்கள் வாகனம் ஓட்டுவதற்காக பிரச்சாரம் செய்ய தொடங்கினார். அது முதல் ஹத்லூல் சவூதி மக்கள் மத்தியில் பிரபலமாக திகழ்ந்து வந்தார்.

இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் சவூதிக்கு எதிராக செயல்படுவதாகவும், வெளிநாடுகளின் விரோதப் போக்குகளுக்கு ஆதரவளிப்பதாகவும் எழுந்த சந்தேகத்தின் பேரில் சில பெண் ஆர்வலர்களுடன் சேர்ந்து ஹத்லூலும் கைது செய்யப்பட்டார்.

அதுமுதல் அவர் மீதான வழக்கில் தீர்ப்பு வழங்கப்படாமலேயே கடந்த இரண்டு ஆண்டு காலமாக சிறை தண்டனை அனுபவித்து வந்தார். இந்நிலையில் ஹத்லூல் மீதான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பில் அவருக்கு 5 ஆண்டுகள் மற்றும் 8 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே சிறையிலிருந்த காலமான 2 ஆண்டுகள் மற்றும் 10 மாதத்தை கழித்து எஞ்சிய காலத்தை சிறையிலிருக்க உத்தரவிட்டுள்ளது. அடுத்தாண்டு மார்ச் மாதம் விடுதலையாக இருந்த நிலையில் இந்த தீர்ப்பினைக் கேட்டதும் கண்ணீர் விட்டு கதறி அழுதார் ஹத்லூல்.

இந்த தீர்ப்பினை அவரது குடும்பம் கடுமையாக எதிர்த்துள்ளது. மேலும் இந்த தீர்ப்பினை எதிர்த்து ஹத்லூல் சகோதரி மேல்முறையீடு செய்யப்போவதாகவும் அறிவித்துள்ளார். சமூக நல ஆர்வலர் ஹத்லூலுக்கு எதிரான இந்த தீர்ப்பு சவூதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பிடனுக்கும் இடையேயான உறவில் உரசலை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் ஹத்லூலுக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பினை குறித்து “மனித உரிமைக்கு எதிராக செய்யப்பட்ட அநீதி” என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments