காப்பாற்ற முயன்ற காவலர்: கைபட்டு தவறிய லைட்டர்; கருகிய கணவன் - மனைவி பலி!

0 46208

கன்னியாகுமரியில் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டிய கணவன் , மனைவியை காப்பாற்ற முயன்ற முயற்சி தோல்வியில் முடிய இரண்டு உயிர்கள் பரிதாபமாக பலியாகின.

கன்னியாகுமரி மாவட்டம் தமிழக - கேரள எல்லைப் பகுதியிலுள்ள நெய்யாற்றங்கரை நெல்லிமூடு பகுதியை சேர்ந்தவர் ராஜன். இவருக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்தவருக்கும் சொத்து தகராறு இருந்து வந்தது. இது தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு நடந்து வந்தது. நீதிமன்றத்தில் ராஜனுக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து, அதிகாரிகள் மற்றும் போலீசார் ராஜன் வசித்த வீட்டை ஜப்தி செய்ய முடிவு செய்தனர்.

அப்போது, அதிகாரிகளிடத்தில் தான் மேல் முறையீடு செய்யவும் தீர்ப்புக்கு ஸ்டே வாங்கவுள்ளதாக ராஜன் கூறியுள்ளார். மேலும், , மாற்று வீடு தேடவும் சாவகாசம் கேட்டுள்ளார். ஆனால் அதிகாரிகள் ராஜனின் வாதத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. தொடர்ந்து தன் மனைவியுடன் வீட்டை விட்டு வெளியே வந்த ராஜன், இருவர் உடலிலும் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டியுள்ளார். உடலில் மண்ணெண்ணெய் ஊற்றப்பட்ட நிலையில் ராஜன் , லைட்டரை எடுத்து பற்ற வைத்தார். இதை பார்த்த அருகிலிருந்த போலீஸ்காரர் ஒருவர் லைட்டரை தட்டி விட முயன்றார். அப்போது, எதிர்பாராத விதமாக ராஜன் உடல் மீது தீ பற்றிக்கொண்டது. அருகிலிருந்த ராஜனின் மனைவி மீதும் தீ பற்றியது . வேதனை தாங்காமல் இருவரும் அலறினர்.சிறிது நேரத்தில் தீயில் கருகி தரையில் சாய்ந்தனர்.

இந்த சம்பவத்தால் அதிர்ந்து போன, பக்கத்தில் இருந்தவர்கள் தீயை அணைத்து இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த நிலையில், ராஜன் சிகிச்சை பலனளிக்காமல் நேற்றிரவு இறந்து போனார். ராஜனின் உடலை உறவினர்கள் அடக்கம் செய்த நிலையில், அவரின் மனைவியும் உயிரிழந்தார்.

கணவன் - மனைவி பரிதாபமாக இறந்த சம்பவத்தால், நெல்லி மூடு பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments