கொரோனா தடுப்பூசிக்கு தயார் நிலை.. 4 மாநிலங்களில் ஒத்திகை

0 3241

பஞ்சாப், அசாம், ஆந்திரா மற்றும் குஜராத்தில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகை மற்றும் பரிசோதனை தொடங்கி நடைபெற்றது. 

அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி உள்ளது. இதே போன்று இந்தியாவிலும் தடுப்பூசி போடும் பணியை தொடங்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. முதற்கட்டமாக 30 கோடி பேருக்கு தடுப்பூசி போடுவது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி போடும் பணிக்காக முதலில் ஒத்திகை பார்க்க திட்டமிட்ட மத்திய அரசு, பஞ்சாப், குஜராத், அசாம், ஆந்திரபிரதேசம் ஆகிய நான்கு மாநிலங்களில் இன்றும், நாளையும் ஒத்திகை பார்க்க உத்தரவிட்டது. இதற்காக 7000 பேரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு முன் பயிற்சி அளிக்கப்பட்டது. அவர்கள் மூலம் 4 மாநிலங்களில் இன்று தடுப்பூசி ஒத்திகை தொடங்கியது. 
இந்த 4 மாநிலங்களிலும் தலா 2 மாவட்டங்களில் இந்த ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் 5 மையங்கள் இதற்காக உருவாக்கப்பட்டு இருந்தன. இந்த மையங்களில் ஒரு முறைக்கு தலா 25 பேர் வீதம் 5 முறைகளில் சுமார் 125 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தடுப்பூசி போட்டுக்கொள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட தன்னார்வலர்களின் செல்போன்களுக்கு குறுஞ்செய்தி, கொடுத்து, அந்தந்த மையங்களுக்கு காலையிலேயே வரவழைத்து, சமூக இடைவெளியுடன் தயார் நிலையில் அமர்த்தப்பட்டனர்.தடுப்பூசி ஒத்திகை மையங்கள் அனைத்திலும் 4 அறைகள் தனித்தனியாக அமைக்கப்பட்டு இருந்தன.

தடுப்பூசி செலுத்த வருபவர்களுக்கு ஆரம்பகட்ட பரிசோதனை, பதிவு செய்தல், தடுப்பூசி செலுத்தும் இடம் மற்றும் தடுப்பூசி செலுத்திய பின்னர் ஏதேனும் பக்கவிளைவுகள் ஏற்படுகிறதா? என்பதை அறிய தங்கும் அறைகள் ஏற்படுத்தப்பட்டு இருந்தன. ஒவ்வொரு அறையிலும் மருத்துவ அதிகாரிகள், டாக்டர் உள்பட 5 பேர் கண்காணித்தனர். அதிகாரப்பூர்வ தடுப்பூசி மருந்து இன்னும் அமலுக்கு வராததால் மாதிரி தடுப்பூசி மருந்து செலுத்தப்பட்டது.

அதன்பிறகு தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் அந்த மையத்தில் சுமார் 30 நிமிடம் உட்கார வைக்கப்பட்டனர்.30 நிமிடங்களில் எந்த பக்க விளைவும் ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்ட பிறகு பயனாளிகள் புறப்பட்டு செல்ல அனுமதிக்கப்பட்டனர். 4 மாநிலங்களிலும் இத்தகைய அடிப்படையில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடத்தப்பட்டது. 

இதனிடையே தடுப்பூசி சேமித்து வைக்கப்படும் மையத்தில் இருந்து ஒத்திகை நடைபெறும் இடத்திற்கு எவ்வளவு மணி நேரத்தில் தடுப்பூசி மருந்து வந்து சேருகிறது என்ற நேரம் கணக்கிடப்பட்டது. இந்த இடைப்பட்ட காலத்தில் மருந்தின் குளிர்பதன தன்மை ஆய்வு செய்யப்பட்டது.ஒத்திகை நடைபெறும் இடத்துக்கு வந்ததும் மீண்டும் தடுப்பூசி மருந்து பற்றிய உறுதி தன்மை சோதனை செய்யப்பட்டது. இந்த தடுப்பூசி செலுத்தும் ஒத்திகை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டு, அந்தந்த மாநில சுகாதாரத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதே போல நாளையும் தடுப்பூசி ஒத்திகை நடைபெறுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments