'தேசிய நெடுஞ்சாலைனு நம்பி ஓட்டிடாதீங்க!'- மாமண்டூரில் காத்திருகிறான் எமன்

0 42193

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மாமண்டூர் அருகே குண்டும் குழியுமாக உள்ள பகுதிகளில் தொடர்ந்து விபத்துகள் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை தமிழகத்திலேயே மிக முக்கியமான நெடுஞ்சாலை. தென் மாவட்டங்களை தலைநகரத்துடன் இணைக்கும் முக்கியமான சாலை என்பதால் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த சாலையில் செல்லும். இப்படி முக்கியத்தும் பெற்ற சாலை பல இடங்களில் குண்டும் குழியுமாக மாறி வருவது வாகன ஓட்டிகளை வேதனையடைய செய்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மாமண்டூரிலிருந்து திண்டிவனம் மார்க்கத்தில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவுக்கு பல லட்சம் செலவில் இந்த சாலை புனரமைக்கப்பட்டது. கடந்த மூன்று மாதத்துக்கு முன்புதான் புதிய சாலையும் அமைக்கப்பட்டது. ஆனால் தரம் குறைவான பணி காரணமாக விரைவிலேயே இந்த சாலை குண்டும் குழியுமாக மாறி விட்டது.

 தேசிய நெடுஞ்சாலை என்று நினைத்து கொண்டு வேகமாக வண்டியை ஓட்டினால் அவர்களுக்கு நிச்சயம் அதோ கதிதான். இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் இந்த பகுதியில் நிலை தடுமாறி கீழே விழுவதும் , பின்னால் வந்த வாகனம் அவர்கள் மீது ஏறி உயிரை பறிக்கும் சம்பவங்களும் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன.கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு இரு சக்கர வானத்தில் சென்ற தந்தையும் பள்ளத்தில் வண்டி வீசப்பட்டனர். கண்ணிமைக்கும் நேரத்தில வந்த லாரி இருவர் மீது ஏறியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்கள்.

அதுபோல, முன்னாள் செல்லும் கார் சடன் பிரேக் போட்டால் பின்னால் , வரும் வாகனங்களும் ஒன்றன் பின் ஒன்றாக மோதிக் கொள்ளும் சம்பவங்களும் அடிக்கடி நடக்கின்றன. சுங்கச்சாவடியில் கட்டண வசூல் செய்வதில் ஆர்வம் காட்டும் அரசு சாலைகளை பராமரிப்பதில் ஏனோ அக்கறை காட்டுவதில்லை. ஒப்பந்தாரர்கள் ஏனோ தானோவென்று சாலை அமைப்பதையும் கண்டிப்பதில்லை. அதனால்தான், விரைவிலேயே சாலைகள் குண்டும் குழியுமாக மாறி விடுகின்றன என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த சாலையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேசிய நெடுஞ்சாலை 45 ல் செல்லும் வாகன ஓட்டிகள் ஜாக்கிரதையாக வாகனம் ஓட்டி செல்வதே நல்லது. ஏனென்றால், மாமண்டூரில் எமன் காத்திருக்கிறான்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments